10,000 வருஷங்களுக்கான காலண்டர்... மாணவர்களுக்கு கணக்கை எளிமையாக சொல்லித்தரும் கணித ஆய்வாளர்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, September 18, 2019

10,000 வருஷங்களுக்கான காலண்டர்... மாணவர்களுக்கு கணக்கை எளிமையாக சொல்லித்தரும் கணித ஆய்வாளர்!



ஒரெயொரு ராமானுஜரை தான் இன்று வரையில் கணித மேதையாகவும், கணித அறிவிற்கு உதாரணமாகவும் சொல்லி வருகிறோம். மாணவர்களுக்கு எளிய முறையில் கணக்குப் பாடத்தின் மீதான பயத்தை போக்கி, சொல்லித் தருவதற்கு திறமையான ஆசிரியர்கள் பல பள்ளிகளில் இன்றும் கிடையாது. இந்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து மற்றொரு கணித மேதை என்று சொல்லும் அளவிற்கு, பிறந்த தேதியை வைத்து அவர் எந்த கிழமையில் பிறந்தார் என்பதையும், இனி வரப்போகும் வருடத்திற்கான, வருட காலண்டர் எப்படி இருக்கும் என்பதையும் தன் மனக்கணக்கால் துல்லியமாக பட்டியலிட்டுக் காட்டுகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன்.

இதற்கு முன்பு 3,000 ஆண்டு வரையில் மட்டுமே வருட காலண்டர் தயாரித்துக் கூறியது சாதனையாக இருந்து வந்தது.


ஆனால், ஜெயச்சந்திரனோ கி.பி. 1ஆம் ஆண்டு முதல் பத்தாயிரம் ஆண்டு வரையில் எந்த ஆண்டு, எந்த மாதம், எந்த தேதியை குறிப்பிட்டாலும் அதற்கான கிழமை என்ன என்பதை ஐந்து நொடிகளுக்குள் சட்டென்று கூறிவிடுகிறார். இவரின் திறமையைக் கண்ட இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் குழுமம் `ஹியூமன் கேலண்டர்" எனும் பட்டத்தை வழங்கியுள்ளது. 54 வயதாகும் ஜெயச்சந்திரனின் சொந்த ஊர் திருச்செந்தூர். பட்டப்படிப்பை முடித்த அவர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கணித அறிவால் எம்.காம்., சி.ஏ., ஐ.ஐ.பி. உள்ளிட்ட படிப்புகளை முடித்த அவர் தனது அசாத்திய கணிதத் திறமையால் வங்கி வட்டி விகிதங்கள் மற்றும் வட்டி விகிதாசாரங்களில் புதுப்புது வழிமுறைகளை கண்டுபிடித்துள்ளார்.
இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்கணிதத்தில் மேல் இருந்த ஆர்வத்தின் காரணமாக வங்கிப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று கணிதத்தில் புதிய சூத்திர முறைகளை அறிவதில் ஆர்வம் காட்டினார். அதன் விளைவாக பத்தாயிரம் ஆண்டுகளுக்கான காலண்டரை உருவாக்கினார். வட்டி விகித முறைகளைக் கணக்கிடுவதற்கென தனி புத்தகம் ஒன்றையும் ஜெயச்சந்திரன் எழுதியுள்ளார். தற்போது தனியார் கல்வி நிறுவனமொன்றில் கணிதப் பேராசிரியராக பணியாற்றி வரும் ஜெயச்சந்திரன் மாணவ மாணவிகளுக்கு புதுப்புது முறைகளில் எளிய கணித சூத்திரங்களை கற்றுத் தந்து அதன் மூலமாக கடினமான கணக்குகளுக்கும் தீர்வு காணும் முறையை சொல்லித் தருகிறார்.


தற்போது, தனது திறமையை உலகறியச் செய்யும் விதமாக லிம்கா சாதனை புத்தகம், கின்னஸ் சாதனை புத்தகம் ஆகியவற்றில் இடம் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். பொது மக்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பயன்படும் விதமாக எளிய முறையில் பல கணித சூத்திரங்களைக் கண்டறிந்து உதவுவதே தன்னுடைய லட்சியம் என்று கூறும் ஜெயச்சந்திரன் நிச்சயம் பாராட்டத்தக்கவர் தான்.



Post Top Ad