ஆவணி மாதம் வரும் 'வளர்பிறை சதுர்த்தி' திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு அவரைக் கொண்டாடினால், நமக்கு எல்லா விதமான நன்மைகளும் உண்டாகும்.
எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். 'பிள்ளையார் சுழி' போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. எனவேதான் 'மூல கணபதி' என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம்.
கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை 'கணபதி' என்று சொல்கின்றோம். எனவே, நாம் 'தேவ' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், 'மனித' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், 'அசுர' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும்.
பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். கணிமண் மட்டும்தான் என்றில்லாமல் உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.
பத்ரபுஷ்பம் எனப்படும் பலவகையான பூக்களையும், எருக்கம் பூ மாலை, அருகம்புல் என அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். முடிந்த அளவுக்கு பழங்களையும் வாங்கி வைக்கலாம். விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தையும் நிவேதனமாக படைக்கலாம்.
இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷமாகும்.
எங்கள் வீட்டில் நாங்கள் பாரம்பரியமாக சிறிய விநாயகர் விக்கிரகம் வைத்துள்ளோம். அதனை வைத்து வழிபாடு செய்யலாமா என்றால் ரொம்ப நல்லது அதனை வைத்து வழிபாடு மகிழ்வாக செய்யலாம். வருடவருடம் புதிதாக விநாயகர் வாங்கித் தான் வழிபாடு செய்வோம் என்றால் அப்படி வழக்கம் வைத்திருந்தால் அவ்விதம் வாங்கி வழிபாடு செய்யலாம்.
வாங்கியதை கட்டாயம் கரைக்க வேண்டும் : வாங்கும் விநாயகரை வணங்கி விட்டு எங்கோ கொண்டு வைப்பது கூடாது. யாராவது எடுத்துச் செல்வார்கள் கரைத்து விடுவார்கள் எனும் அலட்சியத்துடன் விநாயகரை வைப்பதாக இருந்தால் அதனை வாங்காமல் வீட்டில் இருக்கும் விநாயகரை வைத்து நாம் வழிபாடு செய்து கொள்ளலாம். கரைக்கிறதுக்கு நமக்கு வசதி உள்ளது. நாங்கள் முறையாக கரைத்து விடுவோம் என்றால் கட்டாயம் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை முறையாக வாங்குங்கள்.
ஏன் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்க வேண்டும்?
முடிந்த வரை களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வழிபாடு செய்வது சிறப்பானது. அதற்கான காரணம் இயற்கையனுடைய சூழலை பாதுகாக்கும் பொருட்டு நமது முன்னோர்கள் சில பண்டிகைகளுக்கு சில விஷயங்களை வைத்தார்கள். முளைப்பாரி கரைப்பது என ஒரு விஷயத்தை நமது முன்னோர்கள் வைத்திருந்தார்கள். எதற்காக ? ஆடி மாதத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதனால் அந்த ஆடி வெள்ளப்பெருக்கில் மண்ணரிப்பு மிக அதிகமாக இருக்கும் என்பதனாலயும் ஒவ்வொரு ஊர்ல இருந்தும் கொஞ்சம் மண்ணை கொண்டு வந்து உங்கள் ஆற்றில் போடுங்கள் என்றால் யாரும் போட மாட்டார்கள் என்பதனால் விதைகள் நன்றாக விளையட்டும் என விதைவிற்று பார்த்து அந்த நல்ல மண்ணை கொண்டு போய் ஆற்றில் போடுவார்கள். அப்படி ஆற்றில் போடக்கூடிய மண் ஆற்றில் சென்று தங்கும்.
ஆடியை தொடர்ந்து வரும் மாதம் ஆவணி மாதம் . அந்த மாதத்தில் களிமண்ணால் பிள்ளையாரை செய்து ஒரு 3 நாட்கள் அதனை வீட்டில் வைத்திருப்பர். ஏன் அன்றே கரைக்க கூடாதா என்றால் உடனே கரைக்கும் போது மண் பச்சையாக செய்தது போல் இருக்கும் அது தண்ணீரில் எளிதில் கரைந்து ஓடி விடும். ஆனால் அதனை 3 நாட்களுக்கு பின்னர் இறுகி போன பின்னர் ஆற்றிலோ, குளத்திலோ, ஓடும் நீரிலோ ,எதில் போட்டாலும் கொஞ்ச தூரம் ஓடும் கரையாது. அப்படியே தங்கி விடும். இப்படியே ஆங்காங்கே களிமண் சென்று மண்ணரிப்பை தடுக்கும் என்ற காரணத்தால் தான் பெரியவர்கள் 5 பூத தத்துவத்தையும் அதில் அடக்கி உலக நன்மைக்காக இப்படி ஒரு செயலை வழிபாட்டு முறைக்காக நமக்கு அளித்தார்கள்.
இந்த ஆண்டு நமக்கு நன்றாக தண்ணீர் வருகின்றது. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை நாம் நன்றாக வாங்கலாம். அதனை ஆற்றில் கொண்டு போய் 3 நாட்களுக்கு பிறகு நாம் கரைத்து விடலாம். ஆறு குளம் எதுவும் எங்கள் வீட்டின் அருகில் கிடையாது. கிணற்றுள் போடலாமா என்றால் அதிலும் தாராளமாக போடலாம். நம் வீட்டில் இருக்கும் கிணற்றில் அழகாக போடலாம்.
வெளிநாட்டில் இருப்பவர்கள் வீட்டில் வைத்து வணங்கும் விநாயகரை வைத்தே வழிபாடு செய்யலாம். புதிதாக விநாயகர் வாங்க வேண்டும் எனும் அவசியம் கிடையாது. வீட்டிலேயே கைகளால் செய்து மஞ்சளில் விநாயகர் வைத்து எளிமையாக செய்து வழிபடலாம்.
31ம் தேதி காலை பூஜை செய்கின்றோம் எனில் 30ம் தேதி மாலையிலேயே நாம் நமது வீட்டினை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். விநாயகருக்கு பிடித்த நெய் வேத்யங்கள் , பூஜை பொருட்கள் அனைத்தும் முதல் நாளே வாங்கி தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். காலையிலேயே எழுந்து விநாயக பெருமானை வாங்கும் போது நல்ல நேரத்தில் வாங்க வேண்டும். வாங்கி வந்தவுடன் வாசலில் விநாயகரை நிறுத்தி தீபம் காட்டி விநாயக பெருமானே எங்கள் வீட்டில் எழுந்தருளி சந்தோசமாக அனைவரையும் வாழ வைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து விட்டு பூஜை செய்யும் இடத்தில் விநாயகரை வைக்க வேண்டும்.
நெய்வேத்யங்கள் : பால் , பழங்கள் , அப்பம் , கடலை , மோதகம் , கொழுக்கட்டை , தேங்காய் , வாழைப்பழம் , வெற்றிலை பாக்கு என வழக்கமாக நாம் என்ன செய்வோமோ அதனை வைத்து சர்க்கரை பொங்கல் , அவள் , பொறி , கம்பு சோளம் , கரும்புத் துண்டு என கிடைப்பதை வைக்கலாம். எளிமையாக 2 வாழைப்பழம் , வெற்றிலை பாக்கு , அவல் பொரிகடலை வைத்து கூட வழிபாடு செய்யலாம். நமது சவுகரியம் நம்மால் செய்ய முடியவதை பொறுத்து செய்யலாம். விநாயகருக்கு பிடித்த மோதகம் விரும்பி உண்பார்.
வெள்ளை எருக்கு , கலர் எருக்கு எதனை பயன்படுத்துவது ?
இரண்டுமே தாராளாமாக பயன்படுத்தலாம். எருக்கம் பூ நாம் மாலையாக போடலாம். அர்ச்சனைக்கு வைத்து கொள்ளலாம். மிக முக்கியமானது அருகம் புல். அது இருந்தால் மிக விஷேசம். இருந்தால் எளிமையாக வைத்து வழிபாடு நடத்தலாம். விநாயகர் அகவல் பாராயணம் செய்தல் மிக மிக விஷேசம்.
சொல்ல வேண்டிய மந்திரங்கள் - விநாயகர் அகவல் :
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)
எப்போது விநாயகரை கரைக்க வேண்டும்?
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் படைக்க வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் 3 நாட்கள், 7 நட்களிலேயே கரைத்து விடுகிறார்கள்.
3 நாள் வைத்து விநாயகரை கரைக்க வேண்டுமே 3ம் நாள் வெள்ளிக்கிழமை கரைக்க மனம் வரவில்லை எனில் 5 நாள் நாம் வைக்கலாம். ஞாயிற்றுக்கிழமை கரைத்து விடலாம். விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் விநாயகரை கரைக்கும் வரை 1 வேலையாவது வாழை பழம் , ஏதாவது வைத்து வழிபாடு செய்யவும். 1 ரூபாய் வைத்து விநாயகரை வாங்கி வந்தால் அந்த காசை பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலில் உண்டியலில் போட வேண்டும். நீர் நிலையில் போடுவதை விட சிறந்தது.
No comments:
Post a Comment