அரசுப் பள்ளியில் மகளைச் சேர்த்தேன்...ஆனால்?!' - நீதிமன்றத்தை நாடிய 6 வயது மாணவியின் தந்தை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, October 2, 2019

அரசுப் பள்ளியில் மகளைச் சேர்த்தேன்...ஆனால்?!' - நீதிமன்றத்தை நாடிய 6 வயது மாணவியின் தந்தை



திருவள்ளூரைச் சேர்ந்தவர் 6 வயது மாணவி அதிகை முத்தரசி. இவரது தந்தை பாஸ்கரன். இருவரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில், ``மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் `கல்வி கற்பதற்கு உகந்த சூழல் இல்லை, கட்டடத்தைப் புதுப்பிக்க வேண்டும். சட்டவிரோதச் செயல்கள் அங்கு நடைபெறுகின்றன. அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயனில்லை'' என்று தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்ய நாராயணன், சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


பாழடைந்த பள்ளி
`பள்ளியில் தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று கூறி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு அக்டோபர் 16-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதுதொடர்பாக மாணவியின் தந்தை பாஸ்கரிடம் பேசினோம். ``திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் என் மகள் அதிகை முத்தரசி 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். அந்தப் பள்ளி மோசமான சூழலில் இயங்கிவருகிறது. கட்டடம் பாழடைந்து, சுகாதாரமற்று அடிப்படை வசதிகள் முறையாக இல்லாமல் இருக்கிறது.

இது தொடர்பாகப் பதிவு அஞ்சலில் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. வேறுவழியின்றி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினேன். பொதுநல வழக்காக, என் மகள் முத்தரசியை வைத்து, நான் பாதுகாவலராக இருந்து வழக்கைத் தாக்கல் செய்தேன். நேற்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞரிடம் இது தொடர்பாக உரிய விளக்கம் கேட்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டது.


பள்ளியில் முகாமிட்டிருப்பவர்
`பள்ளியில் தனிக் கவனம் செலுத்த அரசு தவறியது ஏன்?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர், மீஞ்சூர் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர் ஆஜராக வேண்டும். புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வளர்ந்துவரும் தனியார் பள்ளிகளின் இடையே, அரசுப் பள்ளியில் என் மகளை சேர்க்கவேண்டும் என முடிவு செய்தேன். பலரும் ஏன் அரசுப்பள்ளி எனக் கேட்ட நிலையில், `அரசு மக்களுக்கானது' என்று அவர்களின் பேச்சை புறந்தள்ளி அதில் சேர்த்தேன். அப்போதுதான் பள்ளியின் நிலை சீர்கெட்டிருப்பதை நேரில் காண முடிந்தது. அதிகாரிகள் நடவடிக்கை இல்லாததால் தொண்டு நிறுவனங்கள் மூலம் சரி செய்யத் திட்டமிட்டேன். அதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்தேன்.

அதுமட்டுமல்லாமல், நானே களமிறங்கி பள்ளியில் உள்ள 6 கதவுகளைப் பழுது பார்த்து, பெயின்ட் வாங்கி வைத்துள்ளேன். `பள்ளியைச் சீரமைத்துவிட்டோம்' என்று நான் கொடுத்த புகாருக்குப் பொன்னேரி கல்வி அலுவலர் பொய்யான தகவலைக் கொடுத்துள்ளார். அது என்னிடம் லெட்டராக இருக்கிறது. அதிகாரிகளைப்பொறுத்தவரை ஒருவரிடமிருந்து மற்றவருக்குக் கைமாறுகிறதே தவிர, நடவடிக்கை எடுத்தபாடில்லை. மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தேன்; அவர் மாவட்ட கல்வி அதிகாரிக்கு, `உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார்.


பாஸ்கரன்
கல்வி அதிகாரி, `நடவடிக்கை எடுக்க' பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ளார். இதற்கான நகல் எனக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், புகார் தூங்கிக்கொண்டிருக்கிறது. தரைகள் பெயர்ந்து, கட்டடம் பாழடைந்து, வளாகத்திலே நோயாளி ஒருவர் முகாமிட்டிருக்கிறார். காலைக்கடன் முதற்கொண்டு எல்லாம் அங்கேயே செய்துகொள்கிறார். பக்கத்தில், அரசுக்குச் சொந்தமான இடம் இருக்கிறது. அதை தனிநபருக்கு தாரை வார்ப்பதற்கு பதிலாக, அரசே அந்த இடத்தைப் பயன்படுத்தி, பள்ளியை விரிவுபடுத்தலாமே?' என ஆதங்கத்தோடு பேசி முடித்தார்.

Post Top Ad