அவனை காப்பாற்றாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்'- சுர்ஜித் மீட்பு பணியில் சுழன்ற 9ம் வகுப்பு மாணவன்! - Asiriyar.Net

Tuesday, October 29, 2019

அவனை காப்பாற்றாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்'- சுர்ஜித் மீட்பு பணியில் சுழன்ற 9ம் வகுப்பு மாணவன்!




திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் உள்ள 600 அடி ஆழ்துளைக் கிணற்றில் 2 வயதுக் குழந்தை சுர்ஜித் தவறி கீழே விழுந்தான். சிறுவனை மீட்க கடும் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகமே சுர்ஜித்தின் வருகைக்காக காத்திருக்கிறது. தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர் சுர்ஜித்தை மீட்பதற்காக கடும் முயற்சி எடுத்து வருகிறார்கள். தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள், எல் அண்ட் டி நிறுவன அதிகாரிகள், ரிக் இயந்திரத்தை இயந்திரத்தை இயக்கும் பணியாளர்கள் என குழுவாக முயற்சி செய்து வருகிறார்கள். அமைச்சர்கள் அங்கேயே இருந்து இந்தப் பணிகளை நேரடியாக கவனித்து வருகிறார்கள்.கடந்த வெள்ளிக்கிழமை சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த போது தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.


 சிறுவனை மீட்க மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மீட்புக்குழுவும், திருச்சியை சேர்ந்த டேனியல் என்பவரது மீட்புக்குழுவும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். டேனியல் மீட்புக்குழுவில் திருச்சியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் மாதேஷ் உள்ளார். இந்தக் மீட்புக்குழுவில் சிறுவன் மிகவும் முக்கியமான நபராக பார்க்கப்படுகிறார். முதல் நாள் இரவு முழுவதும் அந்த மாணவன் கண் அயராமல் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அவர்களது குழுவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.

அந்த சிறுவனின் பெயர் மாதேஷ் என்பது தெரியவந்தது. தன்னார்வத்தோடு இந்தப்பணிகளை சிறுவன் செய்து வருகிறார் என்றார்கள். சிறுவனின் முயற்சியைக் கண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் அழைத்துப்பாராட்டினார். சிறுவன் மாதேஷிடம் பேசினோம் "ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்கும் பணிகளை டேனியல் குழு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறது. நான் இந்த குழுவில் முதலில் உதவியாளனாக இருந்தேன். மீட்புப்பணிகளின் போது என்னசெய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர்களை மீட்பதற்கான நிறைய உபகரணங்களை வைத்திருந்தோம். அரசு ஆழ்துளை கிணற்றை மூடிய வேண்டும் என கடந்த சில வருடங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. தற்போது எங்களிடம் அந்த உபகரணங்கள் இல்லை.


அந்த கருவிகளை போர்வெல் அமைப்பதற்கு பயன்படுத்திவிட்டோம். அந்த கருவிகள் இருந்து இருந்தால் குழந்தையை தூக்கி இருப்போம். ஆனால் ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர்களை கயிறு கட்டி நம்மால் மீட்க முடியும். வேலூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 47 அடியில் சிக்கியிருந்த குழந்தையை 15 நிமிடத்தில் மீட்டோம். சிறுவனை மீட்க போராடி வருகிறோம். சிறுவனின் கைகளில் கயிற்றை சரியாக மாட்ட முடியவில்லை. சிறுவனை காப்பாற்றாமல் நான் இங்கிருந்து செல்ல மாட்டேன். என உருக்கமாகப் பேசினார். டேனியல் மீட்புக்குழுவை சேர்ந்த மாதேஷ் அங்கிருந்த மற்ற குழுக்களுக்கும் உதவி செய்தார். கூட்டு முயற்சியோடு சிறுவனை காப்பாற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.


Post Top Ad