
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் அரசு பள்ளியில், ஆசிரியர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதை கண்டித்து, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளியேறினர்.நெல்லிக்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காமராஜர் படத்துக்கு போடுவதற்காக பூ வாங்குவதற்கு ஆசிரியர் சுபாஷை, தலைமையாசிரியர் தரணிதரன் அனுப்பினார். ஆசிரியர் சுபாஷ் பூ வாங்கி வந்தார். நிகழ்ச்சி துவங்கியவுடன், ஆசிரியர் தணிகாசலம்'வேலை நேரத்தில் ஆசிரியரை வெளியே வேலைக்கு அனுப்புவது தவறு' என தலைமையாசிரியரிடம் கேட்டார். இதனால் ஆசிரியர்கள் சுபாஷ் மற்றும் தணிகாசலத்துக்கும் வாய்தகராறு நடந்தது.மாணவர்கள் முன்னிலையிலேயே இருவரும், கடுமையாக பேசி ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டனர்.
இதை தலைமையாசிரியர் தரணிதரன் தடுக்கவில்லை.பள்ளியில், அடிக்கடி இதுபோன்று ஆசிரியர்கள் தகராறு செய்து கொள்கின்றனர். எனவே தலைமையாசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, பிளஸ் 1 பயிலும் மாணவர்கள் 50 பேர் வகுப்பை புறக்கணித்து பள்ளியில் இருந்து வெளியேறினர்.தகவலறிந்த முன்னாள் கவுன்சிலர் இளந்தென்றல் விரைந்து சென்று, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உணவு இடைவேளைக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு திரும்பினர்.