முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடா? பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு - Asiriyar.Net

Monday, July 22, 2019

முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடா? பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே உள்ள இளம்பிள்ளான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஷீபா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- நான், வேலூர்மாவட்டம் பனப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2004-ம் ஆண்டு முதுகலை இயற்பியல் ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக சொந்த மாவட்டத்துக்கு இடமாறுதல் கேட்டேன். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் முதுகலை இயற்பியல் ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை என்று கூறி பல ஆண்டுகளாக எனக்கு இடமாறுதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் கன்னியா குமரி மாவட்டம் ஆனைக்குழி அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த கல்வி ஆண்டில் (2018-2019) மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதால் அங்கு முதுகலை இயற்பியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாகஇருந்தது. இந்த பணியிடத்துக்கு என்னை இடமாறுதல் செய்வது குறித்து பரிசீலிக்க அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் கடந்த ஆண்டு நடந்த இடமாறுதல் கவுன்சிலிங்கின் போது அந்த இடத்தை மறைத்து விட்டு அதற்கு பின்னர், நிர்வாக காரணங்களை கூறி ராமநாதபுரத்தில் இருந்து வேறொரு ஆசிரியை அங்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இந்த கல்வி ஆண்டில் கடந்த 8-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது. அப்போது தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருபணியிடம் காலியாக இருந்தது மறைக்கப்பட்டது.


இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த பணியிடத்துக்கு கன்னியா குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து அதிகாரிகள் ரூ.4 லட்சம் பணம் பெற்றுள்ளதால் அந்த இடம் அவருக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். கவுன்சிலிங்கின் போது காலி பணியிடத்தை மறைத்து விட்டு அதன்பின்னர் பணம்பெற்றுக்கொண்டு, நிர்வாக காரணத்தை கூறி முறைகேடாக இடமாறுதல் செய்கின்றனர். எனவே, தக்கலை பள்ளியில் உள்ள முதுகலை இயற்பியல் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடத்தை நிரப்ப இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் என்னை வேலூரில் இருந்து இடமாற்றம் செய்து தக்கலை பள்ளியில் நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தக்கலை பள்ளியில் உள்ள காலி பணியிடத்தை நிரப்பஇடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக பள்ளி கல்வித்துறை இயக்குனர், இணை இயக்குனர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

Post Top Ad