ஜாக்டோ-ஜியோ' ஆசிரியர் விபரம் பதிவு; தொடருது பழிவாங்கும் படலம் - Asiriyar.Net

Wednesday, February 6, 2019

ஜாக்டோ-ஜியோ' ஆசிரியர் விபரம் பதிவு; தொடருது பழிவாங்கும் படலம்






தமிழகத்தில் ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் விவரம் கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பில் (எமிஸ்) பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆசிரியர்கள் மீது மட்டும் அரசின் நடவடிக்கைகள் தொடர்வதாக புகார் எழுந்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 3500 துவக்க பள்ளிகள், அங்கன்வாடி மையங்களை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு(ஜாக்டோ- ஜியோ) சார்பில் ஜன., 22 முதல் 29 வரை காலவரையற்ற போராட்டம் நடந்தது. இதில் 95 சதவீதம் பள்ளிகள் மூடப்பட்டன.

இதனால் ஆசிரியர்கள் கைது, சஸ்பெண்ட், பணியிடத்தை காலியாக அறிவித்தல், தற்காலிக ஆசிரியர் நியமித்தல் என அரசு கடுமை காட்டியது. இதற்கிடையே நீதிமன்றம் மற்றும் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்படி பணிக்கு திரும்பினர். ஆனால் அவர்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.

அவர்கள் இன்னும் பணிக்கு திரும்பவில்லை. அமைச்சர்கள், துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை 'ஜாக்டோ- ஜியோ' நிர்வாகிகள் சந்தித்து நடவடிக்கையை கைவிட வலியுறுத்தினர். ஆனால் தற்போது போராட்டத்தில் போது பணிக்கு வராத ஆசிரியர்களின் விபரத்தை 'எமிஸ்' பதிவில் பதிவேற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி மாவட்ட கல்வி அலுவலகங்களில் பதிவேற்றப் பணி நேற்று துவங்கியது.

ஆசிரியர்கள் கூறுகையில், ''ஆசிரியர் மீது மட்டும் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 'எமிஸ்' பதிவேற்றம் நிரந்தர பதிவாக
மாறிவிடும். பிற துறைகளில் இல்லாத நடவடிக்கைகள் கல்வித்துறையில் தொடர்வது அதிர்ச்சி அளிக்கிறது' என்றனர்.

பதிவு எப்படி?

இதற்காக 'ஸ்டிரைக் ரிப்போர்ட்' என்ற பதிவு 'எமிஸ் போர்ட்டலில்' உருவாக்கப்பட்டுள்ளது. அதில் அரசு, உதவி பெறும் ஆசிரியர்களின் விபரத்துடன் 'வேலைநிறுத்தத்தில் பங்கேற்றாரா' என்பதற்கான பதிவு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் எந்தெந்த நாட்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர் என்பதை பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

SOURCE:  தினமலர்

Post Top Ad