பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்
திருக்குறள்
அதிகாரம்: நிலையாமை
திருக்குறள்:339
உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
விளக்கம்:
இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
பழமொழி
Knock and it shall be opened
தட்டுங்கள் திறக்கப்படும்.
இரண்டொழுக்க பண்பாடு
1. அனுதினமும் வாசிப்பை கடைபிடிக்க முயற்சிப்பேன்.
2.ஒழுக்கத்தை, அறிவை போதிக்கும் புத்தகங்களை வாசிப்பேன்.
பொன்மொழி
நேற்று என்பது உடைந்த பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது கையில் உள்ள வீணை.
- அப்துல்கலாம்
பொது அறிவு
1. இந்தியாவில் செயல்படும் எரிமலை எங்கு உள்ளது?
பாரன் தீவு (அந்தமான் நிக்கோபர் தீவுகள்)
2. ஓசோன் படலம் புவியின் எந்த அடுக்கில் உள்ளது?
ஸ்ட்ராட்டோஸ்பியர்
தினம் ஒரு மூலிகைகளின் மகத்துவம்
செம்பருத்தி பூ
1. கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கிறது.
2. கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
3. இதனைத் தேநீராக அருந்தினால் இரத்த அழுத்தம் சீராகும்.
4. இதனை உணவுடன் சேர்த்து உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
5.இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது.
English words and meaning
Jealous. பொறாமை
Jovial. மகிழ்ச்சியான
Juggle. ஏமாற்று
Jettison. விட்டெறிதல்
Jabber. பிதற்றல்
அறிவியல் விந்தைகள்
1. நீரை கொதிக்க வைத்து ஆற வைத்து பின் உறைய வையுங்கள் கண்ணாடி போன்ற ஐஸ்கட்டி கிடைக்கும் ஆனால் சாதாரண நீர் வெண்மையாக உறையும். காரணம் இதில் இருக்கும் ஆக்ஸிஜன் தான்.
2. ஆக்ஸிஜன் வாயு நிலையில் நிறமற்றது. ஆனால் இதை குளிர வைத்து உறைய வைத்து திடநிலைக்கு கொண்டு செல்லும் போது அது வெளிர் நீல நிறத்தில் இருக்கும்.
நீதிக்கதை
சுத்தம்
மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு ஓர் எண்ணம் ஏற்பட்டது. எப்போது பார்த்தா லும் தனது புத்திக்கூர்மையால் அனைவரையும் சிரிக்க வைத்து விடுகிறானே இந்த தெனாலிராமன். இவனை எப்படியும் மட்டம் தட்ட வேண்டும் என்று எண்ணினார். அதன்படியே செயல்படத் தொடங்கினார்.
ஒருநாள் அரசவை கூடியது. அப்போது தெனாலிராமனை அருகில் அழைத்தார் மன்னர். தெனாலிராமா, ''நேற்று இரவு நான் தூங்கும் போது ஒரு கனவு கண்டேன்'' என்றார் மன்னர்.
உடனே தெனாலிராமன் ''அது என்ன கனவு'' என்று கேட்டான்.
அதற்கு மன்னர் ''வழக்கம்போல் நாம் இருவரும் உலாவச் சென்றோம். அப்போது எதிர்பாராதவிதமாக நான் தேன் நிறைந்த குழியிலும் நீ சாக்கடையிலும் விழுந்து விட்டோம்'' என்றார். இதைக் கேட்டதும் அரசவையில் உள்ளோர் அனைவரும் தெனாலிராமனைப் பார்த்து கேலியாகச் சிரித்தனர்.
எல்லோரும் சிரிப்பதைப் பார்த்ததும் தெனாலிராமனுக்கு கோபம் ஏற்பட்டது. இருப்பினும் அடக்கிக் கொண்டான். அரசரை எப்படியும் மட்டம் தட்டியே தீருவது எனக் கங்கணம் கட்டிக் கொண்டான். மறுபடியும் மன்னர் சொன்னார், ''நான் தேன் குழியிலிருந்து எழுந்து விட்டேன். நீயோ அதிலிருந்து கரையேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாய்'' என்றார்.
அதைக் கேட்ட தெனாலிராமன் அதன் பின் என்ன நடந்தது என்று கேட்டான். அதற்குள் நான் விழித்துக் கொண்டேன் என்றார் மன்னர். மறுநாள் அரசவைக் கூடியதும் தெனாலிராமன் வந்தான்.
மன்னரைப் பார்த்து,''மன்னர் பெருமானே தாங்கள் கனவு கண்டதாக சொன்னீர்களே, அதன் மீதியை நான் நேற்று இரவு கனாக் கண்டேன்'' என்றான். அதைக் கேட்டதும் மன்னர் கனவு எப்படி இருந்தது என்றார்.
'' தாங்கள் தேன் குழியிலிருந்து கரையேறி நின்றீர்களா? நானும் எப்படியோ அந்தச் சாக்கடைக் குழியிலிருந்து கரையேறி விட்டேன். இவ்விஷயம் மற்றவர்களுக்குத் தெரியாமல் இருப்பதற்காக நான் உங்களை என் நாவால் நக்கி சுத்தப்படுத்தி விட்டேன். நான் செய்தது போலவே நீங்களும் என்னை தங்கள் நாக்கால் நக்கி சுத்தப்படுத்தினீர்கள்'' என்றான் தெனாலிராமன்.
இவ்வார்த்தைகளைக் கேட்டதும் மன்னர் சிறிது அதிர்ச்சியுற்றாலும் தெனாலிராமனின் சாமர்த்தியத்தை எண்ணி மனமாரப் பாராட்டினார்.
இன்றைய செய்திகள்
1) அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
2) ஆசிரியர்கள், மாணவர்கள் பிளாஸ்டிக் பொருள்களை பள்ளிகளுக்கு எடுத்து வரக் கூடாது
3) அரசு பள்ளிகளில், இனி கட்டாயமாக ஆங்கிலம் பேச வேண்டும்!! அமைச்சர் செங்கோட்டையன்
4) 'கூகுள்' நிறுவனம் நடத்திய, 'ஆன்லைன்' தேர்வில் ஒரே அரசுப் பள்ளியை சேர்ந்த 50 மாணவர்கள் தேர்ச்சி
5) ஜன. 7, 8ல் பள்ளி மாணவிகளுக்கு சென்னையில் மாநில தடகளம்
6) மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்து டூர் : மித்தாலி, ஹர்மான்பிரீத் கேப்டனாக நீடிப்பு