School Morning Prayer Activities - 03.12.2018 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, December 3, 2018

School Morning Prayer Activities - 03.12.2018


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்


திருக்குறள் : 95

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

உரை:
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.

பழமொழி:

Double charge will break even a cannon

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்


பொன்மொழி:

பேச்சு ஒரு விதமாகவும், செயல் வேறுவிதமாகவும் நடப்போரின் உறவைக் கனவிலும் நினைக்கவே கூடாது.

- பாரதியார்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.ஆங்கில எண் 5-க்கு இணையான தமிழ் எண்?
ரு

2.ஆங்கில எண் 6-க்கு இணையான தமிழ் எண்?
சா

நீதிக்கதை :

பாராட்டுவதே பண்பு!

ஒரு காட்டில் துறவி ஒருவர் இருந்தார். அந்தக் காட்டில் வாழ்ந்துவந்த பறவைகள், விலங்குகள் அனைத்திடமும் நட்பாக இருந்தார். அவ்வப்போது அவற்றைச் சந்தித்து உரையாடுவார். அப்படி ஒரு நாள் அவர் காட்டை வலம்வரக் கிளம்பினார். முதலில், யானை ஒன்றைச் சந்தித்தார்.


‘‘என்ன யானையாரே எப்படி இருக்கீங்க?” என்று குசலம் விசாரித்தார்.

“இன்னைக்கு இந்தக் காடு இவ்வளவு பசுமையா இருக்குன்னா அதுக்கு எங்க யானைக் கூட்டம்தான் காரணம். போகும் இடங்களில் இருக்கும் பட்டுப்போன மரங்களை உடைச்சு பாதைகளை உண்டாக்குகிறோம். அதனால், பறவைகள் எச்சமிடும் விதையிலிருந்து புதிய மரங்கள் உருவாகுது. நாங்கள் போடும் பாதைகள்தான் மற்ற விலங்குகளுக்கு வழியாக மாறுகிறது. ஆனால், இங்கே யாருமே எங்க உழைப்பைக் கண்டுக்கிறதில்லே. எங்களை யாரும் மதிக்கிறதுமில்லே” என்று சலித்துக்கொண்டது யானை.

துறவி சிரித்தார். யானைக்குப் பதில் ஒன்றும் சொல்லாமல், ''சரி, நான் வர்றேன்!” என்றபடி நகர்ந்தார்.

சற்று தூரத்தில் கரடி ஒன்றைச் சந்தித்தார். நிறையத் தேனடைகளையும் பலாப்பழங்களையும் சுமந்தபடி வந்துகொண்டிருந்த கரடியிடம், ‘`என்ன கரடியாரே, சந்தோஷமா இருக்கீங்களா?” என்று கேட்டார்.

இப்படி யாராவது கேட்க மாட்டார்களா எனக் காத்திருந்ததுபோல; சுமைகளை இறக்கிவைத்துவிட்டுப் புலம்ப ஆரம்பித்தது. ‘`தேனடைகள் எப்பவும் செங்குத்தான பாறை உச்சியிலோ, மரத்தின் உச்சியிலோ இருக்கும். நாங்க உயிரைப் பணயம் வெச்சு மேலே ஏறி எடுக்கிறோம். இதனால், தேனீக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறோம். அதுமட்டுமா? கரையான் புற்றுகளில் இருக்கும் கரையான்களைச் சாப்பிட்டு அவற்றையும் கட்டுப்படுத்துகிறோம். இல்லையென்றால், அவற்றால் மரங்களுக்குச் சேதம் ஏற்படும். ஆனால், யாரும் எங்க உழைப்பைக் கண்டுக்கிறதில்லே. எங்களை மதிக்கிறதுமில்லே!” - என அலுத்துக்கொண்டது.


அங்கிருந்து நகர்ந்த துறவி, குரங்கு ஒன்றைச் சந்தித்தார். ‘`என்ன மந்தியாரே, நல்லா இருக்கீங்களா?’’ எனக் கேட்டார்.

“கானகத்துக்குள் நுழையும் அந்நியர்கள் பற்றித் தகவல் கொடுத்து, இங்குள்ள பல உயிர்களைக் காப்பாற்றும் பணியைத் தொடர்ந்து செய்துட்டிருக்கோம். ஆனால், சேட்டைக்காரங்க என்ற கேலி மட்டும்தான் மிஞ்சியிருக்கு. எங்களை யாரும் புரிஞ்சுக்கிறதில்லே” என்று நொந்துகொண்டது குரங்கு.

துறவி, இதற்கும் பதில் சொல்லாமல் “சரி! நான் வர்றேன்!” என்றபடி நகர்ந்து சென்றார். சற்று தொலைவில் ஒட்டகச்சிவிங்கி ஒன்றைச் சந்தித்தார். “என்ன சிவிங்கியாரே! எப்படி இருக்கீங்க?’’ என்றார்.

“காடு பூரா புல்லு வளர்ந்து கிடக்கு. கோடைக் காலத்தில் இந்தப் புற்கள் காய்ஞ்சு உரசினால், காட்டுத் தீ பத்திக்கும். நாங்களும் மான்கூட்டமும் மேயறதாலதான் இது கட்டுக்குள்ளே இருக்கு. ஆனால், இங்கே யாரும் எங்க உழைப்பை நினைச்சுப் பார்க்கிறதில்லே” என்றது சிவிங்கி. இதற்கும் துறவி பதில் சொல்லாமல் நகர்ந்துசென்றார்.


அடுத்த நாள். விலங்குகள் அனைத்தும் துறவியின் அழைப்பின் பேரில் அவரது குடில் முன்பு கூடியிருந்தன. எதற்காக அழைத்தார் என்ற கேள்வி அவற்றின் முகங்களில் தொக்கி நின்றன. குடிலைவிட்டு வெளியே வந்த துறவி பேச ஆரம்பித்தார்.

“நீங்க எல்லாரும் உங்க கடமையை நல்லவிதமா செய்யிறீங்க. இருந்தாலும், உங்க உழைப்பை மற்றவங்க புரிஞ்சுக்கலை என்கிற வருத்தம் இருக்கு. யானையாரே, நீங்க உங்க வழித்தடத்தில் போகும்போது அடிக்கடி யாரைச் சந்திப்பீங்க?” எனக் கேட்டார்.

யோசித்த யானை,“மந்தியாரைச் சந்திப்பேன்!” என்றது.

“அப்படிச் சந்திக்கும்போது மந்தி செய்யும் வேலையை என்றைக்காவது பாராட்டி ரெண்டு வார்த்தை பேசினதுண்டா?” எனக் கேட்க, “இல்லை!” என்றபடி தலை கவிழ்ந்தது யானை.

அடுத்து, “கரடியாரே! நீங்க அடிக்கடி யாரைப் பார்ப்பீங்க?” என்று கேட்டார்.

“ம்... சிவிங்கியாரைப் பார்ப்பேன்!” என்றது கரடி.


“அப்படிச் சந்திக்கும்போது ‘உங்களால்தான் காட்டுக்குள் புற்கள் ஒரு கட்டுக்குள்ளே இருக்கு’னு சொல்லிப் பாராட்டி இருக்கீங்களா?’’ எனக் கேட்க, “இல்லை!” என்றபடி கரடியும் தலை கவிழ்ந்தது.

சிரித்த துறவி, “பார்த்தீங்களா... நாம யாரையும் பாராட்டி ஒரு வார்த்தை பேசுறதில்லை. ஆனால், மத்தவங்க மட்டும் நம்மைப் பாராட்டணும்னு எதிர்பார்க்கிறோம். முதலில், மற்றவங்களை மனசுவிட்டுப் பாராட்டக் கத்துக்கோங்க. அந்தப் பாராட்டு இயல்பா இருக்கணும். முகஸ்துதியா இருக்கக் கூடாது’’ என்றார் துறவி.

தங்கள் மன இறுக்கத்துக்கான காரணத்தைப் புரிந்துகொண்ட விலங்குகள், ஒன்றையொன்று பார்த்து மகிழ்வுடன் புன்னகைத்தன.



இன்றைய செய்தி துளிகள் : 

1.பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள்கள் வழங்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

2.அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் திட்டமிட்டபடி 4-ம் தேதி முதல் வேலைநிறுத்தம்!

3.இமயமலையில் 8.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

4. மழலையர் வகுப்புக்கு மார்ச்சில் அட்மிஷன் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

5.புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: 4-ம் தேதி முதல் 3 நாட்கள் கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்

Post Top Ad