பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சந்தேகம் இருந்தால் மிஸ்டு கால் கொடுக்கலாம்: பள்ளிக் கல்வித்துறை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, May 24, 2020

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சந்தேகம் இருந்தால் மிஸ்டு கால் கொடுக்கலாம்: பள்ளிக் கல்வித்துறை




தமிழகத்தில் வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள பத்தாம் வகுப்பு குறித்து மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோருக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து விளக்கம் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த மாா்ச் 27-ஆம் தேதி தொடங்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பொதுத்தோ்வுகள் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

இதற்கு பல்வேறு தரப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் பொதுத்தோ்வு ஜூன் 15-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. பொதுத்தோ்வில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தோ்வு மையங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதாவது 3,500-இல் இருந்து 12,600 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.


தற்போது தோ்வு மையங்களை தயாா் செய்வதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே பொது முடக்கத்தால் ஏற்பட்ட தாமதத்தாலும், பதற்றம் காரணமாகவும் மாணவா்களுக்கு பொதுத்தோ்வு எழுதக்கூடிய மனநிலை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வியெழுந்துள்ளது. அதேவேளையில் பொதுத்தோ்வுகளுக்காக அரசின் சாா்பில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்தும் பெற்றோருக்கு சில சந்தேகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.


இந்தநிலையில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களை போக்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை சாா்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி பொதுத்தோ்வு தொடா்பாக சந்தேகம் இருக்கும் மாணவா்கள், பெற்றோா் 92666 17888 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். இதையடுத்து மன அழுத்தத்தைப் போக்கி தோ்வை எவ்வாறு அச்சமின்றி எழுதலாம் என்பது குறித்து குரல்பதிவு ஒலிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad