காலை 6 முதல் பகல் 1 மணி வரை தான்! கடைகள் திறப்பு நேரம் மேலும் குறைப்பு - Asiriyar.Net

Post Top Ad


Sunday, April 5, 2020

காலை 6 முதல் பகல் 1 மணி வரை தான்! கடைகள் திறப்பு நேரம் மேலும் குறைப்பு
சென்னை : 'அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், இன்று முதல், காலை, 6:00 முதல், பகல், 1:00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும். விதிகளை மீறி கடைகளை திறப்போர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, முதல்வர், இ.பி.எஸ்., எச்சரித்துள்ளார். 

கொரோனா தொற்று, சமூக பரவலாவதை தடுக்கும் வகையில், தமிழக அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமூக விலகலை கடைப்பிடிப்பது குறித்து, அனைத்து மத தலைவர்கள், அவர்கள் சார்ந்த இயக்கங்களின் ஒருமித்த ஆதரவை பெறும் வகையில், மாவட்ட அளவில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

மத சாயம்

இதைத் தொடர்ந்து, மாநில அளவிலான கூட்டம், தலைமை செயலர், சண்முகம் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. மதத் தலைவர்களுடன், தனித்தனியாக இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டங்களில், தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில், அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. 

அந்த முடிவுகள் குறித்து, முதல்வர் நேற்று வெளியிட்ட விபரம்: பொதுமக்கள், எதிர்நோக்கும் பண்டிகை காலத்தில், அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து, சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா தொற்று நோய்க்கு, மத சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும். நோயால் பாதிக்கப்படுவோரையும், அவர்களின் குடும்பத்தினரையும் வெறுப்புணர்வோடு பார்க்காமல், அவர்களை அன்போடும், பரிவோடும் நடத்த வேண்டும். 

தனியார் மருத்துவமனைகளுடன் பேசி, அவற்றை திறக்கவும், தேவையான பணியாளர்களை அனுமதிக்கவும், உரிய வாகன வசதிகளை, கலெக்டர்கள் செய்து தர வேண்டும்.தனியார் மருத்துவமனைகள், நோய் தொற்று உள்ளோரை, பாரபட்சமின்றி பரிவோடும், அன்போடும் நடத்த வேண்டும்.

சமூக ஆர்வலர்கள்

நோய் தொற்று உள்ளவர்களுக்கு, அரசு மருத்துவமனைகளில், அனைத்து வசதிகளுடன், சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள் விரும்பினால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். தொற்று நோய் உள்ளதா என்று கண்டறிந்து, தொற்று நோய் அல்லாதோரை உடனுக்குடன், அவர்கள் வீட்டிற்கு அல்லது தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்ப வேண்டும். 

தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு, மன அழுத்தத்தால் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க, சமுதாய தலைவர்கள், முன் நின்று ஒத்துழைக்க வேண்டும்.மாவட்டம் தோறும், கலெக்டர்கள் அமைத்துள்ள, மன நல மருத்துவர்கள் அடங்கிய குழு உதவியுடன், தனிமையில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு, ஆலோசனைகள் வழங்க, அரசோடு இணைந்து செயல்படலாம்.


தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு, அத்தியாவசிய பொருட்களை வழங்க, அரசு தரப்போடு இணைந்து, சமூக ஆர்வலர்கள் செயல்படலாம். அனைத்து மத தலைவர்களும் கோரியபடி, அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் பிற கட்டடங்களை, தனிமைப்படுத்தப் பட்டோர் பயன்படுத்திக் கொள்ள, சென்னையில் மாநகராட்சி கமிஷனரிடமும், மாவட்ட கலெக்டர்களிடமும் தெரிவிக்கலாம்.

நடவடிக்கை

வயதானவர்கள், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு நோய் உள்ளவர்களின் விபரங்கள் அறிந்து, அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்க, அரசுடன் சேர்ந்து தன்னார்வ தொண்டர்கள் செயல்படலாம். தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி, பயன்படுத்திக் கொள்ள, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மத தலைவர்களும், சமூக தொண்டர்களும், மாவட்டங்களில் கலெக்டர்களுடனும், சென்னையில் மாநகராட்சி கமிஷனருடனும் ஒருங்கிணைந்து செயல்படவும். 

மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, அத்தியாவசிய பொருட்கள் வாங்க, காலை, 6:00 முதல், பகல், 2:30 மணி வரை, அனுமதி வழங்கப்பட்டது.இன்று முதல் காலை, 6:00 முதல், பகல், 1:00 மணி வரை மட்டுமே, அத்தியாவசிய பொருட்கள் வாங்க, அனுமதி அளிக்கப்படும். இதை, பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். விதிமுறைகளை மீறுவோர் மீது, சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.

Recommend For You

Post Top Ad