2003-ல் ஜெயலலிதா.... இன்று சந்திரசேகர் ராவ்... 48 ஆயிரம் அரசு ஊழியர்களை அதிரவைத்த உத்தரவு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, October 7, 2019

2003-ல் ஜெயலலிதா.... இன்று சந்திரசேகர் ராவ்... 48 ஆயிரம் அரசு ஊழியர்களை அதிரவைத்த உத்தரவு!




சம்பள உயர்வு, போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும், பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், வரி விலக்கு, புதிய பேருந்துகளை வாங்குதல் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தெலங்கானா அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் 50 ஆயிரம் பேர் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தெலங்கானா பகுதிகளை தசரா பண்டிகை கொண்டாட்டம் எப்போதும் விஷேசம். இந்த நேரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் நடத்தியது மாநிலத்தில் விவாத பொருளாக மாறியது.ஊழியர் சங்கங்களுடன், மாநில அரசு நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைய மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் இயக்கப்படவில்லை.



இதற்கிடையே, ஊழியர்கள் சனிக்கிழமை மாலைக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார். ஆனால் அவரின் அழைப்பை ஏற்று 1500க்கும் குறைவான ஊழியர்களே பணிக்கு திரும்பினர். மீதமுள்ளவர்கள் பணிக்கு திரும்பவில்லை. நெருக்கடி முற்றவே நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய சந்திரசேகர் ராவ் பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் ஊழியர்களையும் அதிரடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.


மேலும் "பண்டிகை நாட்கள் என்றும்கூட பாராமல் மக்களின் சிரமத்தை கருத்தில் கொள்ளாமல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். ஏற்கெனவே போக்குவரத்து கழகம் ரூ.1200 கோடி நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது நடைபெறும் வேலைநிறுத்தத்தால் இழப்பு ரூ.5 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்" எனப் பேசினார். சந்திரசேகர் ராவின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. ஆனால் தன் அறிவிப்பில் இருந்து பின்வாங்கும் முடிவில் சந்திரசேகர் ராவ் இல்லை எனக் கூறப்படுகிறது. 2003ல் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தினர்.

 போராட்டம்
அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இதேபோன்ற பல ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக டிஸ்மிஸ் செய்தார். பின்னர் அவர்கள் சட்டரீதியாக போராடி பணி பெற்றது தனிக்கதை. தற்போது தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வும் அதே நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே, போராட்டத்தை சமாளிக்க 2 ஆயிரத்து 500 பேருந்துகளை ஒப்பந்தம் செய்துள்ளதோடு, நான்காயிரத்து 114 தனியார் பேருந்துகளும் பொது போக்குவரத்தில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 10 ஆம் தேதி ஸ்டிரைக் தொடர்பாக பதிலளிக்குமாறு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றே ஊழியர்களின் டிஸ்மிஸ் உத்தரவுக்கு பதில் கிடைக்கும் எனத் தெரிகிறது.

Post Top Ad