பள்ளியை சீரமைக்ககோரி 2ஆம் வகுப்பு மாணவி எடுத்த அதிரடி முடிவு.! - Asiriyar.Net

Monday, October 7, 2019

பள்ளியை சீரமைக்ககோரி 2ஆம் வகுப்பு மாணவி எடுத்த அதிரடி முடிவு.!




பள்ளியை சீரமைக்க வலியுறித்தி 2ஆம் வகுப்பு மாணவி உயா்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடா்ந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தெற்கு தொடக்க பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் 6 வயது மாணவி பள்ளியை சீரமைக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

மீஞ்சூரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் அதிகை முத்தரசி (வயது 6). இவர் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தெற்கு தொடக்க பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் மாணவி அதிகை முத்தரசி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் படிக்கும் தொடக்க பள்ளி கட்டிடம் பழுதடைந்து இருக்கிறது.


சுவரில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கசிகிறது.

மேலும் பள்ளி வளாகத்தில் ஆக்கிரமிப்பு மற்றும் சமூக விரோத செயலால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இப்பள்ளி 2.21 ஏக்கரில் இருக்கிறது. இதில் 3 ஆயிரத்து 200 சதுர அடியில் பழைய மற்றும் பாழடைந்த கட்டிடத்தில் பள்ளி கட்டிடம் செயல்பட்டு வருகிறது.

இது மாணவ-மாணவிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. பள்ளி வளாகத்தில் மாலை வேளையில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது.

எனவே பாழடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்கவும், வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் அத்துமீறல்களை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ஷேசாயி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறும்போது, 'மாணவி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு திருவள்ளூர் கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீஞ்சூர் வட்டார கல்வி அலுவலர் பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் நேரில் ஆஜராகி வருகிற 16-ந் தேதி விளக்கம் அளிக்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டனர்.

மாணவியின் தந்தை பாஸ்கரன் வக்கீலாக உள்ளார்.

அவர் கூறும்போது, 'எனது மகள் படிக்கும் அரசு பள்ளியின் கட்டிடம் பாழடைந்த நிலையில் இருப்பதையும், சுகாதாரம் இல்லாமல் இருப்பதையும் பார்த்ததும் உண்மையிலேயே வேதனை ஏற்பட்டது.

இந்த தொடக்க பள்ளி 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இப்பகுதியில் தனியார் பள்ளிகள் வரும்வரை அரசு தொடக்க பள்ளியில் 700 மாணவர்கள் படித்து வந்தனர்.

ஆனால் அதிகாரிகள் பள்ளியில் கல்வி தரத்தையும், கட்டிடத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க தவறி விட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் உயர்நீதிமன்றத்தை அணுகி உள்ளோம்' என்றார்.



Post Top Ad