10,000 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிறக்கத்தையடுத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆபத்து : உபரி பணியிடங்கள் கணக்கெடுப்பு - Asiriyar.Net

Thursday, August 22, 2019

10,000 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிறக்கத்தையடுத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆபத்து : உபரி பணியிடங்கள் கணக்கெடுப்பு
தமிழகத்தில் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிறக்கத்தை தொடர்ந்து உபரியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர்களை காலி செய்யும் நடவடிக்கையில் தொடக்கக்கல்வித்துறை இறங்கியுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை நாடு முழுவதும் கல்வித்துறையில் ஏற்படும் அநாவசிய செலவினங்களை குறைக்கும்படி மாநில அரசுகளை வலியுறுத்தி வருவதுடன், கல்வித்துறைக்காக செலவிடப்படும் செலவினங்களையும் கண்காணிக்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ள தமிழக அரசு, மத்திய அரசின் அழுத்தம் காரணமாக செலவினங்களை குறைக்கும் வழிவகைகளை கண்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைப்பது, காலியாகும் அரசுப்பள்ளி கட்டிடங்களை நூலகங்களாக மாற்றுவது என பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேநேரத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் மாணவர் எண்ணிக்கை எதிர்பார்ப்புக்கு ஏற்ப அரசுப்பள்ளிகளில் உயராததால் வேறுவழியின்றி உபரி ஆசிரியர்கள் கணக்கெடுப்பை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு கையில் எடுத்தது. தமிழகத்தில் அரசு ஆரம்ப பள்ளிகள் 23,928, நடுநிலைப் பள்ளிகள் 7,260, உயர்நிலைப் பள்ளிகள் 3,044, மேல்நிலைப்பள்ளிகள் 2,727 ஆகியவை உள்ளன. இதில் ஆரம்ப பள்ளிகளில் 64,855 ஆசிரியர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 50,508 ஆசிரியர்களும், உயர்நிலைப் பள்ளிகளில் 27,891 ஆசிரியர்களும், மேல்நிலைப்பள்ளிகளில் 73,616 ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர். இவர்களில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 16 ஆயிரத்து 110 உபரி ஆசிரியர்கள் இருப்பது தெரிய வந்தது. இவர்களில் 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களில் 4 ஆயிரம் பேர் பணி நிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளனர். மீதமுள்ள 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை அவர்கள் தற்போது பெறும் அதே ஊதிய விகிதத்தில் இடைநிலை ஆசிரியர்களாக பணியிறக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக தொடக்க, நடுநிலைப்பள்ளிகளிலும் உபரி ஆசிரியர் கணக்கெடுப்பை அரசு கையில் எடுத்துள்ளது. அதன்படி, 1.08.2019ம் தேதி நிலவரப்படி 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பணியிடம் உபரி பணியிடமாக கருத்தில் கொள்ள அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் பள்ளிகளில் 75 மாணவர்கள் இருந்தால் மட்டுமே 3 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். 105 மாணவர்களும், அதற்கு மேலும் இருந்தால் மட்டுமே 4ம் பணியிடம் கருத்தில் கொள்ளப்படும் என்றும் தொடக்கக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கான முறையான அறிவிப்பு வெளியானதும் உபரி ஆசிரியர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு பணி நிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு நியமனம் செய்யப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் நிலை குறித்து வேறு முடிவு எடுக்கப்படலாம். இந்த தகவல் இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, 'பட்டதாரி ஆசிரியர்களை தொடர்ந்து அரசு இடைநிலை ஆசிரியர்கள் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது. இதற்கு மத்திய அரசின் கடும் அழுத்தமே காரணம். வேறு துறைகளில் சிக்கனத்தையும், ஆட்குறைப்பையும் மேற்கொள்ளலாம். கல்வித்துறையில் இந்த நடவடிக்கை நாட்டின் முன்னேற்றத்தையே பாதிக்க செய்து விடும். காமராஜர் காலத்தில் அப்போதைய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு அரசாணை 250ன்படி 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நடைமுறை கடந்த 1996-2000ம் காலக்கட்டத்தில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று ஆனது. இதன் மூலம் 2 லட்சம் ஆசிரியர்கள் என்பது 1 லட்சம் ஆசிரியர்கள் என்று குறைந்தது. தற்போது அரசு மேற்கொள்ள உள்ள நடவடிக்கை மூலம் இன்னும் 10 முதல் 20 ஆண்டுகளுக்கு ஆசிரியர்கள் நியமனம் என்பதே இருக்காது என்பதுடன், டெட் தேர்வு மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களின் நிலையும் கேள்விக்குறியாகும். எனவே, காமராஜர் காலத்து நடைமுறையை மீண்டும் பின்பற்றினால் உபரி ஆசிரியர்கள் என்ற நிலை இருக்காது. புதிய பணியிடங்களும் உருவாகும். ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும். அதோடு தமிழகத்தில் அடிப்படை கல்வியுடன், பள்ளிக்கல்வியும் மேம்படும்' என்று தெரிவித்தனர்.

Post Top Ad