கல்வித் தொலைக்காட்சியின் தொடக்க விழாவை அனைத்துப் பள்ளிகளிலும் ஒளிபரப்ப கல்வித்துறை உத்தரவு - Asiriyar.Net

Sunday, August 25, 2019

கல்வித் தொலைக்காட்சியின் தொடக்க விழாவை அனைத்துப் பள்ளிகளிலும் ஒளிபரப்ப கல்வித்துறை உத்தரவு
கல்வித் தொலைக்காட்சியின் தொடக்க விழாவை அனைத்துப் பள்ளிகளிலும் ஒளிபரப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: "கல்வி தொலைக்காட்சி தொடக்க விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 26) காலை நடைபெற உள்ளது. தொலைக்காட்சி ஒளிபரப்பினை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியை மாணவர்கள், ஆசிரியர்கள் காண்பதற்கு ஏதுவாக கல்வி தொலைக்காட்சியில் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. எனவே, தொடக்க விழாவை அனைவரும் பார்வையிடுவதற்கான உரிய ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்

அதன்படி கேபிள் இணைப்புள்ள பள்ளிகள் "ப்ரொஜக்டர்கள்' மூலம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலாம். கேபிள் இணைப்பு இல்லாத பள்ளிகள் யுடியூப் மூலம் ப்ரொஜக்டரில் நேரலை செய்ய வேண்டும்.
மேலும், கல்வி சேனல் நிகழ்ச்சிகளை மாணவர்கள் காண்பது போல் புகைப்படங்கள், விடியோக்கள் எடுத்து அதை "எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதுதொடர்பான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் வழங்க வேண்டும்' என அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கல்வித்தொலைக்காட்சி தொடக்க விழாவுக்கான அழைப்பிதழை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், செயலாளர் பிரதீப்யாதவ் ஆகியோர் சனிக்கிழமை நேரில் வழங்கினர்.

Post Top Ad