மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் விடைக்குறிப்புகள் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளான சிபிஎஸ்இ, கேந்திர வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த தகுதித் தேர்வை கடந்த ஆண்டு வரை சிபிஎஸ்இ நடத்தி வந்தது. இந்த ஆண்டு தேசிய அளவிலான தேர்வுக் குழுமம் தொடங்கிய நிலையில், சிபிஎஸ்இ தான் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தியது. இந்த தேர்வு கடந்த 7ம் தேதி நடந்தது.
அதில் நாடு முழுவதும் 16 லட்சத்து 91 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். கடந்த ஆண்டு வரை இந்த தேர்வுகளின் விடைக்குறிப்புகள் தேர்வு நடந்த 10 நாளில் வெளியிடப்பட்டு விடும். ஆனால் கடந்த 7ம் தேதி நடந்த தகுதித் தேர்வின் விடைக்குறிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இதனால் தேர்வு எழுதியவர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.