சென்னைக்கு ரயிலில் வந்தது நாய் கறியல்ல.. ஆட்டுக்கறிதான் : ஆய்வின் முடிவில் அறிவிப்பு - Asiriyar.Net

Thursday, November 22, 2018

சென்னைக்கு ரயிலில் வந்தது நாய் கறியல்ல.. ஆட்டுக்கறிதான் : ஆய்வின் முடிவில் அறிவிப்பு


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து, சென்னைக்கு ரயிலில் கொண்டு வரப்பட்டது ஆட்டிறைச்சி தான், நாய் இறைச்சி அல்ல என ஆய்வில் தெரிய வந்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை ஆய்வு செய்த சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனை நடத்திய ஆய்வில் இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து கடந்த 18-ம் தேதி எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் 20 பார்சல்களை உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த பார்சல்களில் துர்நாற்றம் வீசிய ஆட்டு இறைச்சி இருப்பது தெரியவந்தது.


இதையடுத்து அதிகாரிகள் பார்சல்களில் இருந்த இறைச்சியை எடுத்து சோதனை செய்ததில் நாய் இறைச்சியாக இருக்கும் என்றும், ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சியை சேர்த்து பார்சல்களில் அனுப்பியிருக்க கூடும் என்றும் சந்தேகம் அடைந்தனர். இதனையடுத்து அதிகாரிகள் இறைச்சி பார்சல்களை சந்தேகத்தின் பேரில் பறிமுதல் செய்தனர்.

சுமார் 20 இறைச்சி பார்சல்களை உணவுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பார்சல்களில் மொத்தம் 2100 கிலோ இறைச்சி இருந்தது. இத்தகவல் காட்டுத் தீ போல செய்தி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவியதால் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை பிரியாணி கடைகளில் அலை மோதும் கூட்டத்தை பார்க்க முடியவில்லை.

பல்வேறு இடங்களிலும் பிரியாணி விற்பனை வார இறுதி நாட்களில் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கு பாதி விலையை குறைத்து விற்ற போது பிரியாணி கடைகளில் கூட்டம் வராததால் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிட்டது. 


இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில் எழும்பூர் ரயில் நிலையம் வந்தது நாய்க்கறியா அல்லது ஆட்டுக்கறியா என விசாரணை நடத்த ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் லூயிஸ் அமுதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை ஜோத்பூருக்கு சென்றது.  ஜோத்பூரில் இருந்து அனுப்பும்போது மீன் பார்சல்கள் என்று கூறி அனுப்பியுள்ளனர். அதனால் அனுப்பிய நபரின் முகவரி ஜோத்பூரில் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.

அதன் அடிப்படையில் இறைச்சி பார்சல்களை மீன் பார்சல்கள் என்று அனுப்பிய நபரை தேடி இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படையினர் ஜோத்பூருக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள், சென்னை கால்நடை மருத்துவ கல்லூரிக்கு ஆய்வுக்காக எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ள சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ரயிலில் பறிமுதல் செய்யப்பட்டது நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறி தான் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Post Top Ad