வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலனை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, August 2, 2020

வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலனை









வீடுகளில் மக்களிடம் சுமார் 25,000 டன் முதல் 30,000 டன் வரையிலான தங்கம் முடங்கி கிடக்கிறது. இவற்றை வெளியே கொண்டு வர மத்திய அரசு எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை. மாற்று முதலீட்டு
திட்டங்களும் மக்களை ஏற்கவில்லை.

சென்னை: கணக்கில் காட்டாமல் வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தானாக முன்வந்து விவரங்களை ஒப்படைப்போர் வரி மற்றும் அபராதம் மட்டும் செலுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.



 வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்புப்பணத்தை மீட்பதாக உறுதியளித்த மத்திய அரசு, கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவர, சலுகை திட்டத்தை ஏற்கெனவே அறிவித்தது. இதன்படி, கருப்பு பணத்தை தானாக முன்வந்து தெரிவித்தால். 30 சதவீத வரி, 7.5 சதவீத கூடுதல் வரி, 7.5 சதவீதம் அபராதம் என மொத்தம் 45 சதவீதம் வரியை செலுத்தி விட்டு, மீதத் தொகையை வெள்ளையாக தங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதுபற்றி  எந்த விசாரணையும், நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என அறிவித்தது. இருப்பினும் இந்த திட்டம் முழுமையாக வெற்றிபெறவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் முன்பாக, நாட்டில் 15.4 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இதில், 2 லட்சம் கோடி முதல் ₹3 லட்சம் கோடி வரை வங்கிக்கு திரும்பாது என மத்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால், கிட்டதட்ட முழு அளவிலான பணமும் வங்கிக்கு திரும்பியது. இதுவும் மத்திய அரசுக்கு ஏமாற்றம் அளித்தது.

 பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு, பழைய 500, 1,000 பணத்தை வைத்திருந்தவர்கள் பலர் தங்க நகைகள், தங்கக்கட்டிகளாக மாற்றி விட்டனர்.

இதை தொடர்ந்து, வீட்டில் பதுக்கி வைத்திருக்கும் கணக்கில் காட்டாத நகை வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டம் அறிவிக்க உள்ளதாக கடந்த ஆண்டு அக்டோபரில் தகவல் வெளியானது.  இதன்படி, தனிநபர் ஒருவர் எந்த ரசீதும் இல்லாமலும், கணக்கில் காட்டாமலும் வைத்திருக்கும் தங்கத்தை அரசிடம் தெரிவித்து வரி செலுத்த வேண்டும்.



  இதற்கான வரி 30 சதவீதம் முதல் 33 சதவீதம் வரை இருக்கலாம் என அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இப்படி ஒரு திட்டம் செயல்படுத்தும் எண்ணம் அரசிடம் இல்லை என மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.  தங்கத்தின் மீது மக்களுக்கு உள்ள மோகத்தை குறைக்கும் வகையில், நகை அடமான திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015-16 பட்ஜெட்டில் அறிவித்தது.

ஆனால், 2017 ஆகஸ்ட் இறுதியில் வங்கிகள் மூலம் 11.1 டன் தங்கம் மட்டுமே இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டது.  கடந்த 2016ம் ஆண்டில் வருமான வரி 2வது திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. இதில் வருமான வரிச்சட்டம் 115 பிபிஇ பிரிவில் ஏற்கெனவே இருந்த 30 சதவீத வரியை 60 சதவீதமாக உயர்த்தி, கூடுதலாக 25 சதவீத கட்டணம் விதிக்க வழி வகை செய்யப்பட்டது.  இதன்படி கணக்கில் காட்டாத தங்கம் வைத்திருந்தால் 60 சதவீத வரி மற்றும் கட்டணம் சேர்த்து 75 சதவீத வரி விதிக்கப்படும். திருமணமான பெண் 500 கிராம், திருமணமாகாத பெண் 250 கிராம், குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர் 100 கிராம் வரை நகை வைத்திருந்தால் வரி விதிப்பில் இருந்து விலக்கு உண்டு.



 இந்நிலையில், வீட்டில் கணக்கில் காட்டப்படாமல் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி விதிக்கும் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு மீண்டும் பரிசீலனை செய்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.  இதுகுறித்து அதிகாரிகள் சிலர் கூறியதாவது :  

வீடுகளில் மக்களிடம் சுமார் 25,000 டன் முதல் 30,000 டன் வரையிலான தங்கம் முடங்கி கிடக்கிறது. இவற்றை வெளியே கொண்டுவர மத்திய அரசு எடுத்த முயற்சிகள்பலன்தரவில்லை.  மாற்று முதலீட்டு திட்டங்களும் மக்களை ஏற்கவில்லை. எனவே, கணக்கில் காட்டாத நகை விவரங்களை ஒப்படைக்க அவகாசம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு ஒப்புக்கொள்வோர், வரி, அபராதம் செலுத்திய பிறகு தங்களிடம் உள்ள தங்கத்தின் ஒரு பகுதியை மத்திய அரசின் தங்க அடமான திட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முதலீடு செய்யவேண்டி வரும். இந்த திட்டம் பரிசீலனையில் உள்ளது. பிற அதிகாரிகள் தரப்பிலும் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. அதன்பிறகு திட்டம் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புகள் உள்ளன என்றனர்.

Post Top Ad