முழு ஊரடங்கு ரத்தாகுமா? முதல்வர் நாளை முடிவு! - Asiriyar.Net

Friday, August 28, 2020

முழு ஊரடங்கு ரத்தாகுமா? முதல்வர் நாளை முடிவு!



தமிழகத்தில், முழு ஊரடங்கு ரத்தாகுமா; பஸ் போக்குவரத்து துவக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, நாளை(ஆக.,29), முதல்வர் அறிவிப்பு வெளியிட உள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக, மாநிலம் முழுவதும் இம்மாதம், 31ம் தேதி வரை, பொது ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும், மக்களின் வாழ்வாதாரம் கருதி சில தளர்வுகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், பொது போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.


மக்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, 'இ- - பாஸ்' நடைமுறை அமலில் உள்ளது. அதேபோல், ஞாயிறுதோறும், தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பஸ், ரயில் போக்குவரத்து இல்லாததால், மக்கள் இன்னமும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் உள்ளனர். ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர். 


எனவே, ஊரடங்கு எப்போது முடியும் என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மத்திய அரசு, 'இ- - பாஸ்' நடைமுறையை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. அதை ஏற்று, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்கள், 'இ- - பாஸ்' நடைமுறைக்கு, விடை கொடுத்துள்ளன. அதேபோல் தமிழகத்தில், ஊரடங்கு மற்றும் இ -- பாஸ் நடைமுறை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து முடிவு செய்வதற்காக நாளை, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன், முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பின், அரசின் முடிவை முதல்வர் வெளியிடுவார் என தெரிகிறது.

Post Top Ad