ஊரடங்கால் நடுத்தெருவுக்கு வந்த மாற்று திறனாளி ஆசிரியர் - Asiriyar.Net

Post Top Ad


Sunday, May 24, 2020

ஊரடங்கால் நடுத்தெருவுக்கு வந்த மாற்று திறனாளி ஆசிரியர்

ஊரடங்கால் சம்பளம், வருமானம் இன்றி தவிக்கும் மாற்று திறனாளி தொகுப்பூதிய ஆசிரியர் ஒருவர், வாடகை கொடுக்க முடியாததால், வீட்டை காலி செய்து, நடுத்தெருவிற்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த மாபூஸ்கான்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர், ஆனந்தகுமார்; ஒரு கை இழந்த மாற்று திறனாளி. இவர், சோழவரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு மாத தொகுப்பூதிய சம்பளம், 7,700 ரூபாய். பள்ளி நேரம் தவிர்த்து, சுவர் ஓவியம், 'பெயின்டிங்' வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அமுதா, நுாறு நாள் வேலை திட்டத்தில், விவசாய வேலை பார்த்து வந்தார்.ஊரடங்கு காரணமாக, இரண்டு மாதங்களுக்கு மேலாக, இருவருக்கும் வருமானம் இல்லாமல் போனது. மேலும், தொகுப்பு ஊதியர்களுக்கு, மே மாதம் சம்பளம் வழங்கப்படுவதில்லை. மூன்று மாதங்களாக, வாடகை செலுத்த முடியாததால், வீட்டு உரிமையாளருக்கு, 18 ஆயிரம் ரூபாய் வரை பாக்கி ஏறியது.

வீட்டு உரிமையாளர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார்; அவரும் இரண்டு மாதங்களாக வருமான இன்றி தவித்தார். அவரின் நிலையை புரிந்து, ஆனந்தகுமாரே வீட்டை காலி செய்து, குடும்பத்துடன் நடுத்தெருவிற்கு வந்து விட்டார்.

அவரின் நிலையை உணர்ந்த நண்பர் ஒருவர், தனது இடத்தில் கொட்டகை அமைத்து, தங்க அனுமதி கொடுத்தார்.


இரண்டு மகன்கள், மனைவியுடன் அடிப்படை வசதி கூட இல்லாமல், தகர கொட்டகையில், ஆனந்தகுமார் குடியேறியுள்ளார்.ஆனந்தகுமார் கூறியதாவது:

தொகுப்பு ஊதியத்தில், 2012ம் ஆண்டு, ஓவிய ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். பள்ளி கல்வித் துறையில் தொகுப்பூதியத்தில், 16 ஆயிரத்து, 549 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில், 192 பேர் மாற்று திறனாளிகள்; 36 பார்வையற்ற மாற்று திறனாளிகள், இசைப் பிரிவில் பணி புரிகின்றனர்.இரண்டு ஆண்டுகள் அரசு பணியில் தொடர்ந்தால், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, விதி உள்ளது.


அதற்காக, ஏழு ஆண்டுகளாக, 192 பேரும் போராடி வருகிறேம்; அரசு செவிசாய்க்கவில்லை. ஊரடங்கை முன்னிட்டு, மே மாத சம்பளத்தையாவது கொடுத்திருக்கலாம்.


என்னை போல, எத்தனை மாற்று திறனாளிகள், நடுத்தெருவுக்கு வந்தனரோ தெரியவில்லை. எனவே, கல்வித்துறை, எங்களின் நிலைமையை உணர்ந்து உடனடியாக, மே மாதத்திற்கான சம்பளம் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Recommend For You

Post Top Ad