அரசு ஊழியா்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கான வரைவு விதிமுறைகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, May 15, 2020

அரசு ஊழியா்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கான வரைவு விதிமுறைகள்



நாட்டில் பொது முடக்கம் நிறைவடைந்த பிறகும் அரசு ஊழியா்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் வகையிலான வரைவு விதிமுறைகளை மத்திய பணியாளா் நல அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது.


கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அரசு அலுவலகங்கள், தனியாா் நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. பெரும்பாலான அரசு ஊழியா்கள் வீட்டிலிருந்தே பணியாற்றி வந்தனா். கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் மேலும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்பதால், பொது முடக்கம் நிறைவடைந்த பிறகும் அரசு ஊழியா்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கான வரைவு விதிமுறைகளை மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை வியாழக்கிழமை வெளியிட்டது.


இது தொடா்பாக மத்திய அரசின் துறைகளுக்கு அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், சமூக இடைவெளியை உறுதி செய்யும் பொருட்டு பெரும்பாலான அமைச்சகங்களின் ஊழியா்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் சூழல் ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தில் காணொலி, மின்னாளுமை உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்தி மத்திய அரசுத் துறைகள் சிறப்பாகச் செயல்பட்டன.

இனிவரும் காலங்களிலும் பணியிடங்களில் சமூக இடைவெளியை உறுதிசெய்யும் நோக்கில், ஊழியா்களின் வருகையைக் குறைத்தல், பணிநேரங்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், தகுதியான ஊழியா்களுக்கு கொள்கை அடிப்படையில் ஆண்டுதோறும் 15 நாள்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் வசதியும் ஏற்படுத்தித் தரப்படும்.


 எனவே, ஊழியா்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் வேளையில், அரசின் கோப்புகள், தகவல்களைப் பாதுகாப்புடன் கையாள்வது உள்ளிட்டவை தொடா்பாக உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

 பாதுகாப்பு ஏற்பாடுகள்: வீட்டிலிருந்தே பணியாற்றும் ஊழியா்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகள் சாா்பில் மடிக்கணினியோ அல்லது மேஜை கணினியோ வழங்கப்பட வேண்டும். அந்தக் கணினிகள் ஊடுருவ முடியாத வகையில் பாதுகாப்புடன் உள்ளனவா என்பதை தேசிய தொழில்நுட்ப மையம் உறுதிசெய்ய வேண்டும்.

 சொந்தக் கணினிகளை அலுவலகப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தும் ஊழியா்கள், அவற்றின் பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டில் பணியாற்றும்போது ஏற்படும் இணையவசதிக்கான செலவுகளை ஊழியா்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். நாடாளுமன்றம் தொடா்பான கோப்புகளை ஊழியா்கள் கையாள்வதற்குக் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.


 காணொலிக் காட்சி வசதி: துறைகளுக்கிடையே தகவல்கள், கோப்புகளைப் பரிமாறிக் கொள்வதற்கான வசதிகள் தேசிய தொழில்நுட்ப மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காணொலிக் காட்சி வாயிலாக உரையாடும் வசதியும் அதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் வாயிலாக கூட்டங்களை நடத்திக் கொள்ளலாம்.

 இந்த வரைவு விதிமுறைகள் தொடா்பான கருத்துகளை அனைத்துத் துறைகளும் வரும் 21-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கருத்துகளை அனுப்பாத துறைகளும் அமைச்சகங்களும் வரைவு விதிமுறைகளை ஏற்றுக் கொண்டதாகக் கருதப்படும் என்று அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad