அண்ணா என்று சொன்னவுடனே நம் நினைவுக்கு வருவது. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, February 3, 2019

அண்ணா என்று சொன்னவுடனே நம் நினைவுக்கு வருவது.






அண்ணா என்று சொன்னவுடனே நம் நினைவுக்கு வருவது மாநில சுயாட்சி. திராவிட நாடு, தனிநாடு கோரிக்கையை அழுத்தமாக வைத்தவர், அதற்கான அத்தனை செயல்பாடுகளையும் உயிருடன் இருக்கும்வரை நிறைவேற்றிக்கொண்டே வந்தார், மாநில சுயாட்சி என்ற பெயரில். அதன் முதல் பெரும் வெற்றிதான் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிட்டது. இது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல. மாநில நலன்களை இரண்டாம் பட்சமாக்கிய மத்திய அரசுக்கு எதிரான முதல் சம்மட்டி அடி. அண்ணாவின் ஆட்சியில்தான் பெயர் மாற்றம் நடந்தது. அந்தவகையில் தமிழ்நாட்டின் முதல் முதல்வர் அண்ணாதான்.

இன்றைக்கு பலரும் நினைக்கலாம், 'வெறும் பெயர்மாற்றம்தானே, இதில் என்ன இருக்கிறது' என்று. அவர்களுக்கு நிகழ்கால சான்றுகளே இருக்கின்றன. 29.01.2018ல் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லம் மற்றும் தமிழ்நாடு விருந்தினர் இல்லம் ஆகியவற்றிற்கு வைகைத் தமிழ் இல்லம், பொதிகைத் தமிழ் இல்லம் எனப்பெயர் மாற்றப்பட்டது. பெயரில் என்ன இருக்கிறது என நினைப்பவர்கள், தமிழ்நாடு இல்லம் என்ற இந்தப் பெயரை மாற்ற எண்ணும் நோக்கத்தையும் இதன்பின் இருக்கும் அரசியலையும்  புரிந்துகொண்டால் அந்த மாற்றம் எவ்வளவு பெரியது என்பதை அறியலாம்.


நாம் எண்ணும் அளவிற்கு அது உடனேவோ அல்லது எளிதாகவோ கிடைத்த வெறும் பெயர் மாற்றம் இல்லை, அதுதான் மாநில சுயாட்சிக்கான தொடக்கப்புள்ளி. 1956ம் ஆண்டு இந்தக் கோரிக்கைக்காக தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். 1957ம் ஆண்டு முதல்முறையாக திமுக வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. அப்போதும் தமிழ்நாடு பெயர் மாற்றத்தை வலியுறுத்தியது. ஆனால் அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு பல்வேறு காரணங்கள் கூறி அதை நிறைவேற்றவில்லை. பின் 1967 மார்ச் 6ல் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியமைத்தது, ஜூலை 18ல் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் போடப்பட்டது.

இந்திய நாடு, தேசிய ஒற்றுமை என்ற பெயரில் இந்தித் திணிப்பும் டெல்லிக்கு மட்டுமே முக்கியத்துவம் என்ற நிலையும் தெற்கு கண்டுகொள்ளப்படாததும் நிகழ்ந்துகொண்டிருந்தபோது தமிழ்நாடு எனப் பெயரிட்டது வரலாற்றின் உச்சம்தான். இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்த பேரறிஞர் அண்ணா சுயமரியாதைத் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது முதற்கொண்டு பல முக்கிய திட்டங்களைக் கொண்டுவந்தார். அப்படிப்பட்ட தலைவர் மாண்பு மிகு. அண்ணாதுரையின் 50 வது நினைவுநாள் இன்று. பெருமையாக, கம்பீரமாகக் கூறுவோம், தமிழ்நாடு என்று அதுதான் நாம் அண்ணாவிற்கு செய்யும் மரியாதை.

Post Top Ad