Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Send Your Study Materials, TLM, Videos, Articles To Aitpervai@gmail.com - www.asiriyar.net செய்திகளை WhatsApp -ல் பெற 9597063944, 7200511868 எண்களில் எதாவது ஒரு எண்னை நீங்கள் Admin - ஆக உள்ள குரூப்பில் இணைக்கவும்

Search This Blog

#அரசு_ஊழியர்களின்_போராட்டமும்_சில_உண்மைகளும். ஆசிரியர்கள் மீது ஏன் இவ்வளவு வன்மம் கக்கப்படுகிறது?


பலரும் பலவாறு சமூக ஊடகங்களில் விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். போராட்டத்தை அறிவித்திருப்பது அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ. ஆனால் மக்களின் பார்வையில் ஏதோ ஆசிரியர்கள் மட்டும் சம்பளத்திற்காக போராடுவது போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. 

 ஆசிரியர்களுக்கு எதிரான மக்களின் இந்த மனோபாவம் வெகுவிரைவில் பல அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு உறுதுணையாக இருக்கும். அரசுத்துறையின் பல்வேறு நிலைகளில் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியாளர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். பின்னாளில் அந்தப் பணிகள் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்படும். காலப்போக்கில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் ஒப்பந்ததாரர்களின் கைகளில் சிக்குண்டு இருக்கும். பிறகு ஜனநாயகமாவது,  .

வெந்ததைத் தின்று விதிவந்தால் சாக காத்திருக்க வேண்டும்.  அரசு ஊழியர்களுக்கு எதிரான மக்களின் வெறுப்பு மனோபவம் இன்றைக்கு அரசாங்கத்திற்கு உதவியாக இருக்கலாம். பல இடங்களில் ஆளும் கட்சியினர் பெற்றோர்கள் என்ற போர்வையில் ஆசிரியர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். குடியரசு தினத்தன்று ஆசிரியர்கள் தேசியக்கொடி ஏற்றுவதை சில இடங்களில் தடுத்திருக்கின்றனர். ஆனால் இது எந்த நேரமும் அரசுக்கு எதிராக முடியும் என்பதையும் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள மறந்துவிட்டனர்.

தன் சக ஊழியருக்கு எதிரான வெறுப்பை ஊதிப் பெரிதாக்குவது ஆப்பு அசைத்த குரங்கின் கதையாகத்தான் முடியும்.   ஆசிரியர்களுக்கு ஊதியம் அதிகம் என்று பரவலாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கான ஊதியம் என்பது ஆசிரியர்கள் கேட்டவுடன் அள்ளிக்கொடுக்கப்பட்டவை அல்ல. பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு அந்தக் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து, அந்தக் கோரிக்கையின் மீது சட்ட விதிகளுக்கு உட்பட்டு பல குழுக்கள் விவாதித்து,  பின்னர் அரசு அறிவித்த உரிமைகள்.   

ஆசிரியர்களின் ஊதியம் குறித்து கேள்வி எழுப்புபவர்கள், ஊதியமே இல்லாத உள்ளூர் வார்டு உறுப்பினர்கள் சொகுசு பங்களாவுடன் இனோவா காரில் வலம் வருவது குறித்து எந்தக் கேள்வியும் எழுப்புவதில்லை.   எங்கோ ஒரு ஆசிரியர் தன்னுடைய பணியில் அலட்சியமாகவோ அல்லது குறைபாட்டுடனோ நடந்து கொண்டிருக்கலாம். எல்லாத் துறைகளிலும் இது போன்ற தவறுகள் இருக்கிறது. அதற்காக ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் கேள்விக்குள்ளாக்குவது பெரும் சீர்குலைவையே ஏற்படுத்தும்.   இந்த நாட்டின் முக்கிய ஆதாரமே மனிதவளம்தான்.

இதற்கு அடித்தளம் இடுபவர்கள் ஆசிரியர்கள். இதை மறந்துவிட்டு அவர்கள் மீது வன்மத்தைக் கக்குவது எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும். இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.  தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் சில ஆயிரத்திற்குப் பணி செய்கிறார்கள் என்பதும், நாட்டில் வேலையில்லாமல் பல இளைஞர்கள் காத்திருக்கிறார்கள் அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பதும் கருத்துக் குருடர்களின் வாதம் ஆகும். ஆசிரியர்களுக்கான பல தகுதித் தேர்வுகளை முடித்து அரசுப் பள்ளிக்கு வந்திருப்பவர்களின் தகுதியோடு, தனியார் பள்ளி ஆசிரியர்களின் தகுதியை எந்த விதத்திலும் ஒப்பிட இயலாத ஒன்றாகும். 

கடந்த 2003 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற அரசு ஊழியர்களின் போராட்டத்தின் போது, நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்கள் பின்னாளில் நிரந்தரமாக்கப்பட்டனர். இப்போது அவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் என்பதை வசதியாக மறந்துவிட்டனர். எனவே அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பாதி வழங்கினால் போதும் நாங்கள் பணியாற்றுகிறோம்  என்பவர்களின் பேச்சு எல்லாம் தண்ணீரில் எழுதப்பட்ட ஆவணத்தைப் போன்றதுதான். 

சுனாமிதாக்கி செத்து விழுந்த நபர்களின் உடலில் இருந்த நகைகளை சிலர் கழட்டி எடுத்துச் சென்ற காட்சியை ஒரு நண்பர் சில நாட்களுக்கு முகநூலில் பதிவிட்டிருந்தார். அந்தக் காட்சி என் நினைவுக்கு வருகிறது. இறந்தவர்களின் உடலில் இருந்து நகைகளைத் திருடிச் சென்றவருக்கும், போராடியவர்களின் பணி இடத்தை எனக்குக் கொடுங்கள் என்று போய் நிற்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.  எத்தகைய மன வலியோடு அந்தக் காட்சியை இன்றைய சூழலில் முகநூலில் பதிவிட்டிருப்பார் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.  ஏன்? அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் என்ற கேள்வியும் பலராலும் எழுப்பப்படுகிறது. 

தன்னுடைய பணத்தை விரயம் செய்து தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிக்குகோபி சில ஆசிரியர்கள் அனுப்புகிறார்கள் என்றால் அதற்கான காரணத்தை கேள்வி எழுப்புபவர்கள் யோசிக்க வேண்டும்.   நேர ஒழுங்கு, சுத்தம், சுகாதாரம் போன்றவை குழந்தைகளுக்கு முக்கியமானவை. இது எவற்றையும் நமது அரசுப் பள்ளிகளில் பார்க்க முடியாது. பல அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகளே இல்லை எனலாம். கழிப்பறை இருக்கின்ற பள்ளிகளிலும் பயன்படுத்த முடியாத காட்சிப்பொருளாகத்தான் இருக்கிறது.   இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பல பெண் குழந்தைகள்  கல்வியைத் தொடராமல் விடுவதற்கு சுகாதாரமான கழிப்பறைகள் இல்லாத நிலைதான் மிக முக்கியக் காரணம் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 

இப்படிப்பட்ட நிலையில்தான் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய நிர்பந்தம் சிலருக்கு நேரிடுகிறது. இதில் ஆசிரியர்களும் அடங்குவர். இதையும் மீறி பல ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிக்கு அனுபப்பி வருகிறார்கள். அவர்களை முன்மாதிரியாக வளர்ந்து, பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளுக்கு அனுப்பியுள்ளனர்.

இதை யாராலும் மறுக்க முடியாது.  அரசாங்க பள்ளிகளில் எந்த ஒரு செயலையும் அரசு அலுவலர்கள் சுயமாக முடிவெடுக்க முடியாத நிலையே தொடர்கிறது. அந்த ஊரில் உள்ள அரசியல் வாதியின் விருப்பப்படிதான் பள்ளி நடத்தியாக வேண்டும். குழந்தைகளை ஆசிரியர்கள் கண்டிக்க முடியாது. அவர்கள் போக்கிலேயே பணி செய்ய வேண்டும் என்பது போன்ற பல சங்கடங்கள் அரசுப்பள்ளிகளில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.   கல்வி என்பது எல்லோருக்கும் சமமாகவும் ஒரே விதமாகவும் கிடைக்க வேண்டும். இது அரசியலமைப்புச் சட்ட உரிமை. நாடு முழுவதும் கல்வியை அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்து தனியார் பள்ளிகளே இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும் என்பது நெடுநாளைய கோரிக்கையாகும்.

ஆனால் அரசாங்கம் கல்வியைத் தனியார் மயமாக்குவதிலேயே தன் கவனத்தைச் செலுத்தி வருகிறது.   பள்ளிகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் என்ற நிலை வந்துவிட்டால் பல அரசியல் வாதிகளுக்கு வியாபாரமே இல்லாமல் போய்விடும். இதை ஏன் மக்கள் கேள்வி எழுப்பக்கூடாது? இந்த நிலையில் இருந்துதான் பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்.  தற்போதைய அரசு ஊழியர்களின் போராட்டத்தில் சுயநலம் இருக்கலாம். ஆனால் அதில் பொதுநலமும் இருக்கிறது என்பதை மக்கள் உணராவிட்டால் நாளைய சந்ததிகள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள். அரசியல் கட்சிகள் பங்களிப்பு இல்லாத போராட்டத்தை ஆட்சியாளர்கள் எளிதில் ஒடுக்கிவிடலாம். பின்வாங்கச் செய்யலாம்? அந்தப் பின்னடைவு என்பது அரசுக்கான பின்னடைவுதான். 

அரசு ஊழியர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டி இருக்கிற விதிகளின் அடிப்படையில் அவர்களிடம் வேலை வாங்குவதுதான் சரியாக இருக்கும். இதைத் தவிர்ந்து ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் மீதும் வெறுப்பைக் கக்குவது என்பது எதிர்காலத்தில் அரசுப் பணியிடங்கள் என்பதையே ஒழித்துக் கட்டுவதற்கான அடித்தளமாகிவிடும் அபாயம் இருக்கிறது.   பணியிடை நீக்கம், பணியிடம் காலியாக அறிவிப்பு, தற்காலிக பணியாளர்கள் நியமணம் என்று தொடரும் அச்சுறுத்தல்களால் சிலர் பணிக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

போராடும் சட்ட உரிமை என்பது எளிமையாகக் கிடைத்த ஒன்றல்ல. பலரும் ரத்தம் சிந்தி பெற்ற உரிமையாகும்.   முறையாக சட்ட அறிவிப்புக் கொடுத்து அறிவிக்கப்பட்டுள்ள போராட்டத்தினை எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், சிலரை சிறைக்கு அனுப்பிவிட்டு, சிலர் மட்டும் பணிக்குத் திரும்பியிருப்பது ஒரு தவறான முன் உதாரணத்தையே தரும். இவர்களிடம் படிக்கும் மாணவர்கள் கூட நாளைக்கு இவர்களைப்போலவே வாழ்க்கையில் தடுமாறிப்போவர்கள். 

இந்த அரசாங்கம் பலவீனமான அரசாங்கம் என்று நம்பிக்கொண்டு இருந்தவர்களுக்கு இப்போது ஒரு உண்மை புரிந்திருக்கும். தனது ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து, அந்த இடங்களை காலி இடமாக அறிவிக்கும் அளவிற்கு இந்த அரசாங்கத்திற்கு பலம் இருக்கிறது என்பது வெளிப்படையாகியிருக்கிறது. இதன் பின்னால் யார் இருக்கிறர்கள் என்பதையும் இந்த நேரத்தில் நினைவு கூர்வது அவசியமாகும்.

 1) 01.04.2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமுல்படுத்த வேண்டும். 

2) இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும். 

3) பல்வேறு துறை சார்ந்த ஊழியர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைதல், காலமுறை ஊதியம் பெற்று வருபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும். 

4) 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும். 

5) 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் அளிக்கப்பட வேண்டும். 

6) இளைஞர்களின் வேலைவாய்;ப்பினை பறிக்கின்ற வகையில் வெளியிடப்பட்டு உள்ள அரசாணை எண்: 56-ஐ ரத்து செய்ய வேண்டும். 

7)  5000 ஆயிரம் பள்ளிகளை மூடும் அரசின் முடிவை கைவிட வேண்டும். 

8). புதிதாக தொடங்கப்படவிருக்கும் எல்.கே.ஜி, மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்காக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பணி மாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். 

9) 3500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று ஒன்பது அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஜனவரி 22 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

ஐந்து நாட்கள் ஆகியும் அரசு பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை. மாறாக அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இன்றைக்குப் போராடுபவர்கள் மூலமாகத்தான் அரசின் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் என்பதையும், எதிர்காலத்தில் நிறைவேற்றப் போகிறோம் என்பதையும் அரசாங்கம் எண்ணிப் பார்க்க வேண்டும். 

இந்நிலையில், ஒன்பது அம்சக் கோரிக்கையில் உள்ள சுயநலத்தை மட்டுமல்லாமல், அதில் உள்ள பொதுநலத்தையும் பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். ஒருவேளை இந்தப் போராட்டம் தோல்வி அடையளாம். அது போராடியவர்களின் தோல்வியாக இருக்காது. ஓட்டுமொத்த அரசு இயந்திரத்தின் தோல்வியாக அது அமையும்.   இந்தத் தோல்வியின் வாயிலாக பல அரசுத் துறைகள் தனியார் வசம் போகும். அரசுத் துறையில் தனியார் ஆதிக்கம் என்பது நாட்டை மறு காலனி ஆதிக்கத்திற்கு உட்படுத்தும் அபாயத்தை உள்ளடக்கியது ஆகும். 

 #ஆ_தமிழ்மணி_வழக்கறிஞர். #Advocate_Tamilmani_post*

More

 

Most Reading

Sidebar One

தமிழ்நாடு வேலைவாய்ப்பு செய்திகள்