60 ஆண்டுக்கு ஒருமுறை வரும் அரியவாய்ப்பு: இன்று தைஅமாவாசை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, February 4, 2019

60 ஆண்டுக்கு ஒருமுறை வரும் அரியவாய்ப்பு: இன்று தைஅமாவாசை





சூரியனும், சந்திரனும் இணையும் நாள் அமாவாசை. இந்நாளில் மறைந்த முன்னோர்களுக்கு பசி, தாகம் ஏற்படுவதாக தர்ம சாஸ்திரம் கூறுகிறது. அதைப் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால் பிதுர் வழிபாடு செய்கிறோம். தந்தைவழி (பித்ரு வர்க்கம்), தாய்வழி (மாத்ரு வர்க்கம்), குருவழி (காருணீக வர்க்கம்) என மூவகையாக செய்யப்படும் இந்த வழிபாடு 'தர்ப்பணம்' எனப்படும். 'திருப்திப்படுத்துதல்' என்பது இதன் பொருள். அப்போது சொல்லும் மந்திரங்கள் அர்த்தம் நிறைந்தவை. இதை சரியாக கேட்டு பிழையின்றி சொல்வது அவசியம்.



தேதியா... திதியா...

முன்னோரை வழிபடும் எண்ணம் இருந்தாலும் தாய், தந்தை இறந்த தேதிகளில் சிலர் வழிபடுகின்றனர். இது தவறு. தேதி என்பது வெறும் அடையாளம் தான். சாஸ்திரப்படி திதியன்று தான் தர்ப்பணம் செய்ய வேண்டும். தமிழ் மாதம், பட்சம், (வளர்பிறை, தேய்பிறை), திதியை சரியாக அறிந்தும், முன்னோர்களை வரிசைப்படுத்தியும் திதி கொடுப்பது அவசியம்.



மகோதய அமாவாசை:

ஆடி, புரட்டாசி, தை மாத அமாவாசைகள் சிறப்பானவை. திங்கட்கிழமையும், திருவோண நட்சத்திரமும், அமாவாசையும் இணைந்து 60 ஆண்டுக்கு ஒருமுறை வரும் மகோதய அமாவாசையாக இன்று வருவது சிறப்பு. இந்நாளில் ஆறு, கடலில் தர்ப்பணம் செய்வது புண்ணியத்தை தரும். 


தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரைக் கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிப்பர். இதை அமாவாசை விரதம் என்பர். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தவை. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகியன.

தை மாதம் முருகனையும், அம்பாளையும் பூஜித்துக் கொண்டாடும் மாதம் என்றாலும் தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.

பித்ருக்களுக்கான கடனைச் சரியாக நிறைவேற்றுவதால் பல நன்மைகள் உண்டாகும். பித்ருகளுக்குத் திதி தருவது, பிண்டம் இடுவது, வழிபாடு செய்வது ஆகிய பித்ரு கடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிறது சாஸ்திரம். இக்கடனை அடைத்துவிட்டால் பிள்ளைகளின் வாழ்க்கை கலங்காதிருக்கும். மென்மேலும் சிறக்கும். பித்ருகடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான் ஸ்ரீராமரிடம் கூறி இருக்கிறார். ஸ்ரீராமசந்திர மூர்த்தி, தசரத சக்கரவர்த்திக்கும், ஜடாயுவுக்கும் எள்ளைத் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார். அப்போது, சிவபெருமான் ஸ்ரீராமரின் முன் தோன்றி, முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ததால் அனைத்துப் பாவங்களும் நீங்கி, எல்லா நன்மைகளும் தேடி வரும் என்றார் என்கிறது புராணச் செய்தி.

தை அமாவாசையன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜா, அனுமதி தருவார். யமத் தூதர்கள் பித்ருக்களை சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு அழைத்து வருவார் கள். பித்ருக்களும் அவரவர் சந்ததி யினர் இல்லத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார் களாம். அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் இட வேண்டியது அவசியம். இந்தத் தர்ப்பணமானது பித்ருக்களைக் குளிரச் செய்து குடும்பத்தில் துர் சம்பவங்கள் நடக்காமல் காக்கும். பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூடக் கருணை காட்ட முடியாது. உதவி செய்ய முடியாது என்கிறது கருட புராணம்.

தை அமாவாசை அன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து திதி செய்வர். ராமேசுவரம், திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி மற்றும் காவிரியின் முக் கூடல் தலமான பவானி இங்கெல்லாம் இத்தர்ப்பணத்தை அளிக்க மக்கள் கூட்டம் அலை மோதும்.


ராமேஸ்வரத்தில் பிரபலமான அருள்மிகு ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் ஆகியோரின் திருவுருவச்சிலை கள் தை அமாவாசையன்று அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டுப் புனித நீராடல் நடைபெறும்.

இதே நாளில் தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். ராமேஸ்வரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்குத் தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Post Top Ad