இனி இதையெல்லாம் கடைப்பிடியுங்கள் - பொதுமக்களை எச்சரிக்கும் சுகாதாரத்துறை - Asiriyar.Net

Tuesday, June 2, 2020

இனி இதையெல்லாம் கடைப்பிடியுங்கள் - பொதுமக்களை எச்சரிக்கும் சுகாதாரத்துறை



“பொதுவாகவே வைரஸ்கள் மழைக்காலத்தில் வேகமாகப் பரவும் தன்மை கொண்டவை. தென்மேற்கு பருவ தொடங்கி உள்ளதால் இனிதான் கவனமாக இருக்க வேண்டிய காலம்” என எச்சரிக்கிறார் மதுரை துணை இயக்குனர் டாக்டர் ப்ரியா.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளகுறிச்சி, காஞ்சிபுரம் விழுப்புரம் மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் ‘கரோனா’ வைரஸ் ஒரளவு கட்டுக்குள் இருக்கிறது.


சென்னை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்வோருக்கே பெருமளவு தற்போது ‘கரோனா’ தொற்று கண்டறியப்படுகிறது. மிகக் குறைவாகவே உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கு ‘கரோனா’ உறுதி செய்யப்படுகிறது.

அதனால், ‘கரோனா’ பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தடை செய்து, அப்பகுதியில் வேறு பகுதிகளுக்கு மக்கள் இடம்பெயராதவாறு கட்டுப்படுத்தப்படுகின்றனர்.

தமிழகத்தை மண்டலம் வாரியாக பிரித்து, அந்த மண்டலத்திற்குள்ளான மாவட்டங்களில் பஸ், கார், இரு சக்கரவாகனங்களில் இ-பாஸ் இல்லாமல் மக்கள் சென்று வருவதற்கு தமிழக அரசு சில ஊரடங்கு தளர்வுகளை வழங்கியுள்ளது.


மதுரை மண்டலத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு இடையே மக்கள் பஸ், கார், பைக்குகளில் தாராளமாக வந்து செல்லலாம். ‘கரோனா’ பாதிக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இந்த தளர்வுகள் செல்லுபடியாகாது.

இந்நிலையில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் ‘கரோனா’ இறப்பு விகிதம் குறைந்ததோடு சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் பொதுமக்களிடம் முன்பிருந்த ‘கரோனா’ அச்சம் தற்போது இல்லை.

அதனால், அவர்கள் ஊரடங்குத் தளர்வுகளை பயன்படுத்தி வழக்கம்போல் தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழத்தொடங்கியுள்ளனர். குழந்தைகள், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று எச்சரித்தும் தற்போது பொது இடங்களில் கைக்குழந்தைகள் முதல் 10 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுடன் பெற்றோர் கார், இரு சக்கர வாகனங்களில் வெளியே பொருட்கள் வாங்க வந்து செல்கின்றனர்.

முதியவர்களும் தாராளமாக பொருட்கள் வாங்குவதற்கும், நடைப்பயிற்சி செல்வதற்கும் வெளியே வரத்தொடங்கியுள்ளனர். சிலர் முகக்கவசம் கூட அணியாமல் வந்து செல்கின்றனர்.


தற்போது மதுரையில் கோடை மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம், வியாழக்கிழமை தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேலாக சூறாவளிக் காற்று, இடிமின்னலுடன் பலத்த மழை பெய்து சாலைகளில் சிற்றாறுகள் போல் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நேற்று முன்தினம் கனமழை பெய்தது. தொடர் மழையால் மதுரையில் வெயிலின் தாக்கம் குறைந்து சீதோஷனநிலை மாற்றமடைந்துள்ளது.

அதேநேரத்தில் அறிகுறியே இல்லாமல் பெரும்பாலானவர்களுக்கு ‘கரோனா’ தொற்று உறுதி செய்யப்படுகிறது. தொடங்கியுள்ளதால் ‘கரோனா’ வேகம் அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படும்நிலையில் மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் மதுரையில் பொதுஇடங்களில் மக்கள் நடமாட ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை துணை இயக்குனர் டாக்டர் ப்ரியாவிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ‘‘பொதுமக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே மதுரையில் ‘கரோனா’ சமூகப் பரவல் நிலையை அடையாமல் கட்டுக்குள் இருக்கிறது. தற்போது வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கும், மேலும், நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் மட்டுமே ‘கரோனா’ உறுதி செய்யப்படுகிறது.


அதனால், அன்றாட வாழ்வாதாரத்திற்காக ஊரடங்கில் சில விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டிருந்தாலும் மக்கள் வழக்கம்போல் சமூக இடைவெளி, முகவசம் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசியத் தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். வெளியே சென்று விட்டு வருவோர் வீட்டிற்குள் செல்வதற்கு முன் கை, கால்களை கழுவ வேண்டும். அணிந்திருக்கும் துணிகளை பாதுகாப்பாக கழற்றி வைத்துவிட்டு கண்டிப்பாக குளிக்க வேண்டும்.

செருப்பு, ஷூக்களை வெளியே கழற்றிவிட்டு வர வேண்டும். பொதுவாக எந்த ஒரு வைரஸூம், மழைக்காலத்தில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதேதான் இந்த ‘கரோனா’ வைரஸுக்கும் பொருந்தும். அதனால், இனிதான் மிகக் கவனமாக இருக்க வேண்டிய காலம். கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்களை வெளியே அழைத்து வரக்கூடாது.


சர்க்கரை நோயாளிகள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ந்து அறிவுரைகளையும், கட்டுப்பாடுகளையும் சொல்லிக் கொண்டே இருக்கிறோம் என்று சலிப்படையக்கூடாது.

அறிகுறியிருந்தால் உடனே சென்று பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு வாழ்ந்ததால்தான், ஆரம்பத்தில் இருந்த நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளோம்.

தொடர்ந்து அதுபோல் மக்கள் பாதுகாப்புடனம், விழிப்புடனும் அறிவுறுத்தும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பழைய இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்’’ என்றார்.

Post Top Ad