மாணவர்களின் கல்வி விஷயத்தில் அரசு ஈகோ பார்க்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தனது மகன் 10ம் வகுப்பு படித்து வருவதாகவும் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்றால், நாடு முழுவதும் நடைபெறும் ஒரே நுழைவு தேர்வான, ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்.
தற்போது, புதிய நிபுணர்களை நியமித்து, பாடத்திட்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின் பணிக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருந்தால் தான், புதிய பாடத்திட்டத்தை உருவாக்க முடியும். ஏற்கனவே குழுவில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், உயர்மட்ட குழுவிலிருந்து ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரனை மாற்ற தடை விதித்திருந்தார்.
வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘உயர்மட்டக்குழுவின் பணி முடிந்துவிட்டது என்றும் அதே போல பாடத்திட்ட குழுவின் பணியும் முடிந்து விட்டது. ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்’’ என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘உயர்மட்டக்குழு பணிகள் இன்னும் முடிவடையவில்லை’’ என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரனை வேறு துறைக்கு மாற்றினாலும் கூட ஆலோசனை கூட்டங்களில் அவரை ஏன் சிறப்பு அழைப்பாளராக அழைக்கக் கூடாது? மாணவர்களின் கல்வி விஷயத்தில் தமிழக அரசு ஈகோ பார்க்க வேண்டாம்.
மாணவனின் கல்வி நலனே முக்கியம். தமிழக கல்வி அமைச்சர் கூறியது போல, மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க வெளிநாடுகளில் இருந்து நிபுணர்களை அழைத்துவரும் திட்டம் எந்த நிலையில் உள்ளது? இது குறித்து 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்’’ என்று தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.