அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 11 லட்சம் மாணவ மாணவியருக்கு கையடக்க ‘டேப்’ (Tab)வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை, எம்ஜிஆர் நகர் அரசு மேனிலைப் பள்ளியில் பிளஸ்1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 424 மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த, அடல் டிங்க்கரிங் லேப் திறந்து வைத்து பேசியதாவது:
மடிக்கணினி தொடர்பான வழக்கு முடிந்த நிலையில் டெண்டர் விடப்பட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 11 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு விரைவில் ‘டேப்’ வழங்கப்படும். இது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இந்நிலையில் மத்திய அரசின் உதவியுடன் மாவட்டம் தோறும் அடல் டிங்கரிங் என்ற திட்டம் செயல்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு எலக்ட்ரிக், எலக்ட்ரானிக், ரோபோட்டிக் தொழில் நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் மேற்கண்ட தொழில் நுட்ப பயிற்சி பெறும் மாணவர்கள் ரோபோடிக் போன்ற புதிய கருவிகளை கண்டுபிடிக்கும் அளவுக்கு திறன் பெற்றவர்களாக மாறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் 675 பள்ளிகளில் தலா ரூ20 லட்சம் மதிப்பில் அடல் டிங்க்கரிங் லேப் அமைக்கப்படும். அடுத்த ஆண்டு 1000 பள்ளிகளில் அமைக்கப்படும். இதற்காக மத்திய அரசு ரூ272 கோடி வழங்க முன்வந்துள்ளது. பள்ளிகளில் பற்றாக்குறை உள்ள பணியிடங்களில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் பகுதி நேர ஆசிரியர்கள் 3 நாட்களில் நியமிக்கப்படுவார்கள்.
அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 70 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடக்கப் பள்ளிகளில், நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் என்பது குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 0.80 சதவீதமாக உள்ளது. இந்திய அளவில் இது மிகவும் குறைவுதான். இந்திய அளவில் பார்க்கும்போது நடுநிலைப் பள்ளிகளில் 4.3 சதவீதம், தமிழகத்தில் 1.40 சதவீதமாக இடை நிற்றல் உள்ளது. படிப்படியாக இடைநிற்றலை குறைப்போம். தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு அரசுப் பள்ளிகளில் சீருடை மாற்றி அமைக்கப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.