அரசு வேலை பெற 15 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் - அரசு ஊழியர் கைது - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, June 12, 2020

அரசு வேலை பெற 15 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் - அரசு ஊழியர் கைது



டி.என்.பி.எஸ்.சி. துணை செயலாளர் எனக்கூறி அரசு வேலை வாங்கித்தருவதாக தெரிவித்து ரூ.15 லட்சம் அபகரித்தவரும், அவருடைய கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் புளிக்காரத்தெருவை சேர்ந்தவர் தனராஜ். அவருடைய மனைவி டெய்சி. இவர்கள் இருவரும் ஆசிரியர்களாக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களின் மகன் சைமன். ஆந்திராவில் மருத்துவ கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.


டெய்சிக்கு சென்னை சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையில் உதவியாளராக வேலை பார்க்கும் ஜார்ஜ் பிலிப் என்பவர் அறிமுகமாகி உள்ளார். அப்போது அவர் தனக்கு சென்னையில் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.) வேலை பார்க்கும் பிரகாஷ் என்ற நாவப்பன் என்பவரை நன்கு தெரியும் என்றும், அவர் பலருக்கு அரசு வேலை வாங்கி தந்துள்ளதாகவும், அவரிடம் கூறி அரசு வேலை வாங்கித்தருவதாகவும் தெரிவித்தாராம்.

இதனை நம்பிய டெய்சி தனது மகளின் கணவர், சகோதரியின் மகன் மற்றும் உறவினர் என 3 பேருக்கு அரசு வேலை வாங்கித்தரும்படி கேட்டுள்ளார். இதையடுத்து ஜார்ஜ் பிலிப் தலா ரூ.5 லட்சம் மற்றும் கல்வி சான்றிதழ் நகல்களை தருமாறு கேட்டுள்ளார். அதன்படி டெய்சி அவர் கேட்டுக்கொண்டபடி தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.15 லட்சம் பணம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி நேற்று முன்தினம் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் பணம் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டு அதன்படி காத்திருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த ஜார்ஜ் பிலிப் தன்னுடன் வந்த நபரை பிரகாஷ் என்ற நாவப்பன் என்றும் சென்னை தலைமை செயலகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் துணை செயலாளராக வேலை பார்ப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் நம்பிக்கை ஏற்பட்ட டெய்சி மற்றும் அவரின் மருமகன் ஜுபல் ஆகியோர் பணத்தை கொடுத்துள்ளனர்.

அதனை பெற்றுக்கொண்ட இருவரிடம் பணி நியமன ஆணைகளை கேட்டபோது பதில் ஏதும் பேசாமல் காரை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த டெய்சி இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரின் பிரத்யேக எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு சோதனை மேற்கொண்டனர். அப்போது எஸ்.பி.பட்டினம் பகுதியில் தப்பி செல்ல முயன்ற 2 பேரையும் போலீசார் காருடன் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் நாவப்பன் என்ற பிரகாஷ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவை சேர்ந்தவர் என்பதும், இவர் நாவப்பன் என்ற பெயரிலும், பிரகாஷ் என்ற பெயரிலும் தன்னை உயர் அதிகாரி என அறிமுகம் செய்துகொண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் துணை செயலாளர் என்று அடையாள அட்டை உள்ளிட்ட போலி ஆவணங்கள், விசிட்டிங் கார்டு தயார் செய்து பலரிடம் மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பிரகாஷ் என்ற நாவப்பன் மற்றும் ஜார்ஜ் பிலிப் ஆகிய 2 பேரையும் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Post Top Ad