அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, August 27, 2019

அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?




உலகளவில் மிகவும் பிரபலமான காடு பிரேசிலின் அமேசான் காடு ஆகும். இந்த அமேசான் காடு பிரேசில், கொலிம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி இருக்கிறது. இவற்றில் அதிகளவில் பிரேசிலில் அமேசான் காடு உள்ளது. இந்தக் காட்டில் பல அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. சமீபத்தில் இந்தக் காடுகளில் அதிகளவில் காட்டுத் தீ பரவி வருகிறது. எனவே அந்தப் பகுதியின் பெரும்பாலான இடங்களில் காட்டுத் தீயின் புகை அதிகரித்து வருகிறது.

 



இந்த வருடத்தில் அமேசான் காடுகளில் அதிகமான தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9,500 காட்டு தீ சம்பவங்கள் அமேசான் காடுகளில் நடைபெற்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்தக் காட்டுத் தீயின் புகை மண்டலம் அட்லாண்டிக் கடல் பகுதி வரை பரவியுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் காபர்னிகஸ் செயற்கை கோள் கண்டுபிடித்துள்ளது.

மேலும் இந்தப் புகையின் மூலம் அதிகளவில் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளிப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் புகையினால் கார்பன் மோனோ ஆக்சைடு வெளியாகி வருவதும் தெரியவந்துள்ளது. அதாவது தெற்கு அமெரிக்காவின் கடற்பகுதியில் அதிகளவில் கார்பன் மோனோ ஆக்சைடு வாயு பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 



மேலும் தற்போது இருக்கும் அமேசான் காடுகளின் அளவில் 20-25 சதவிகிதம் அழிக்கப்பட்டால் அது உலகிற்கு மிகப் பெரிய கேட்டை விளைவிக்கும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் அமேசான் காடுகள் வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை உள்வாங்கி கொண்டு வருகிறது. அதாவது ஒரு 'கார்பன் சிங்க்' (Carbon sink) ஆக செயல்பட்டு வருகிறது. ஆகவே இந்த அளவிற்கு அமேசான் காடுகள் அழிக்கப்பட்டால் வளி மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவு அதிகரிக்கும்.



அத்துடன் அமேசான் காடுகள் பூமியின் ஆக்ஸிஜன் வாயு அளவில் 20 சதவிகிதத்தை வெளிப்படுத்துகின்றன. எனவே இது பூமியின் நுரையீரலாக செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் அமேசான் காடுகள் அழிக்கப்பட்டால் அங்கு இருந்து வரும் ஆக்ஸிஜன் வாயுவின் அளவு குறையும் அபாயம் ஏற்படும். இந்த அமேசான் காட்டை அழிப்பதன் மூலம் பருவநிலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும் என்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Post Top Ad