சத்துணவு ஒரு தலைமுறையின் ஏக்கம்! - அதை அழிப்பதுதான் தமிழக அரசின் நோக்கமா? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, December 31, 2018

சத்துணவு ஒரு தலைமுறையின் ஏக்கம்! - அதை அழிப்பதுதான் தமிழக அரசின் நோக்கமா?





ஏழைக் குழந்தைகளின் வயிற்றில் அடிக்கவும் துணிந்துவிட்டது தமிழக அரசு. எத்தனையோ சமூக நலத் திட்டங்களை திராவிடக் கட்சிகள் கொண்டுவந்திருந்த போதிலும், பள்ளி மாணவர்களுக்காகக் கொண்டுவரப்பட்ட சத்துணவுத் திட்டம்தான் இன்றளவும் நாட்டுக்கே முன்னோடித் திட்டமாக இருக்கிறது. அதைச் சொல்லிதான் அ.தி.மு.க-வினரும் வாக்கு கேட்கிறார்கள். ஆனால், அந்தத் திட்டத்தை அவர்களே அழிக்கவும் துணிந்து விட்டார்கள் என்பதுதான் வயிற்றில் அடிக்கும் நிஜம்!

1960-களில் தமிழகத்தை ஆண்ட காமராஜர், பள்ளிக்குச் செல்லாமல் ஆடு மாடு மேய்த்துக்கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்து வேதனையடைந்தார். அந்தக் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு வரவழைக்க வேண்டும் என்று காமராஜர் கொண்டு வந்ததுதான் மதிய உணவுத் திட்டம். அந்தத் திட்டத்தின் பயனாக ஏராளமான குழந்தைகள் பள்ளிகளில் சேர்ந்தார்கள். மிகப்பெரிய சமூக மாற்றம் ஏற்பட்டது. இதேத் திட்டத்தை, 1982-ல் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., ‘சத்துணவுத் திட்டம்’ என்று மேம்படுத்தினார். கருணாநிதியும் ஜெயலலிதாவும் அதை இன்னமும் மேம்படுத்தி முட்டை, சுண்டல், கீரை, கலவை சாதம் என்று சாதனைப் படைத்தார்கள். இந்தத் திட்டத்தால் இப்போதும் பல லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுவருகின்றனர்.


இந்த நிலையில்தான், 25 குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு முடிவுசெய்துள்ளது என்றும், இதனால் 8,000 சத்துணவு மையங்கள் மூடப்படும் என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் நூர்ஜஹான் கூறுகையில், “தமிழகத்தில் 1.25 லட்சம் மாணவர்கள் சத்துணவுத் திட்டத்தால் பயன்பெறுகிறார்கள். இந்நிலையில், 8,000 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் மூடப்படும்; அங்கெல்லாம் மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு இனி, அருகில் உள்ள பள்ளிகளின் சத்துணவு மையங்களில் இருந்து உணவு எடுத்து வரப்படும் என்று செய்திகள் வருகின்றன. மிகவும் தவறான முடிவு இது. இதுமட்டும் நடந்துவிட்டால் ஏராளமான குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும். பலர் பள்ளிக்கு வருவதையே நிறுத்திவிடுவார்கள். சிலர், தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்லவும் வாய்ப்பும் அதிகம். ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும், மலைக் கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளும் பள்ளிகளுக்கு வரமாட்டார்கள். ‘தமிழக அரசின் சத்துணவுத் திட்டம் சிறப்பாகச் செயல்படுகிறது என்று ஐ.நா சபையே கூறியிருக்கிறது’ என்று ஆட்சியாளர்கள் பெருமையுடன் கூறுகிறார்கள். பிறகு ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்கள் என்று புரியவில்லை.

தவிர, இந்த முடிவால் சத்துணவு ஊழியர் களும் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் மொத்தம் 44,000 சத்துணவு மையங்கள் உள்ளன. ஏற்கெனவே அங்கெல்லாம் காலிப் பணியிடங்கள் நிறைய உள்ளன. அங்கு புதிதாகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகிறோம். ஆனால், மூடப்படும் சத்துணவு மையங்களில் பணியாற்றுபவர்களை வைத்து, காலிப் பணியிடங்களை நிரப்பப்போவதாகச் சொல்கிறார்கள். மிகவும் வேதனையாக இருக்கிறது” என்றார்.


இதுகுறித்து தமிழ்நாடு சமூகநலத்துறை ஆணையர் அமுதவல்லியிடம் கேட்டபோது, “1992-ல் போடப்பட்ட அரசாணையின்படி, 8,000 மையங்களை மூட வேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது போடப்பட்ட ஆணையின்படி சத்துணவுக் கூடங்கள் தொடர்ந்து செயல்படும். 25-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில், அதாவது 8 மாணவர்கள் அல்லது 9 மாணவர்கள் வீதம் படிக்கும் பள்ளிகளில் மூன்று சத்துணவு ஊழியர்கள் வரை உள்ளனர். அத்தனை குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கும் மையங்களுக்கு மூன்று சத்துணவு ஊழியர்கள் தேவையா? அவர்களைத்தான் அருகிலேயே இருக்கும் பள்ளிகளுக்கு மாற்ற இருக்கிறோம். அதிலும், வரும் ஆண்டில் ஓய்வுபெறும் நிலையில் உள்ள வர்களை மாற்றப்போவதில்லை. அவர்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே தொடருவார்கள். அதன்படி 4,000 மையங்களில் மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது” என்றார்.
அரசுத் தரப்பில் சொல்லப்படும் இந்த நடைமுறைச் சிக்கல்களையும் யோசித்தே இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அதேசமயம் சத்துணவு என்பது ஒரு தலைமுறையின் ஏக்கம். அதை அழிப்பதுதான் தமிழக அரசின் நோக்கம் எனில், வரலாற்றில் அது நீங்காத கரும்புள்ளியாகவே பதியப்படும்!

- ஐஷ்வர்யா

Post Top Ad