காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் வெறும் சம்பிரதாயத்திற்காக நடைபெறுகிறது - Thanthi Tv அதிர்ச்சி வீடியோ - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 23, 2018

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் வெறும் சம்பிரதாயத்திற்காக நடைபெறுகிறது - Thanthi Tv அதிர்ச்சி வீடியோ


பள்ளிகளில் பலவகை தேர்வுகள் நடத்தப் பட்டாலும், மார்ச், ஏப்ரலில் நடக்கும்  பொதுத்தேர்வு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த பொதுத் தேர்வுக்கு மாணவர்களை முன்கூட்டியே தயார் படுத்தும் வகையில், காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் மற்றும் இந்த தேர்வுகளுக்கு முன்னதாக பருவத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.

10, 11 , 12 ம் வகுப்பு  மாணவர்களுக்காக பொதுத்தேர்வு எப்படி நடைபெறுமோ, அதே போன்ற வகையில் கேள்வித் தாள்கள் தயாரிக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பொது தேர்வுக்கு முன்னதாக மாணவர்கள் உரிய பயிற்சியை பெற வேண்டும், பொது தேர்வின் போது மாணவர்களிடையே எந்த பயமும் ஏற்பட கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 


ஆனால், 12 ம்  வகுப்பு வேதியியல் தேர்வு கேள்வித்தாள்  மூன்று நாட்களுக்கு முன்னதாகவே சமூகவலைதளங்களில் சர்வசாதாரணமாக உலாவந்தது, அதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, வேறு கேள்வித் தாளை வழங்கி தேர்வை நடத்தாமல், அலட்சியமாக அதே கேள்வித்தாளை  வைத்து 22ஆம் தேதி தேர்வையும் பள்ளிக்கல்வித்துறை நடத்தி முடித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேள்வித்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. 

ஆனால் இந்த விதிமுறையை காற்றில் பறக்கவிட்டு,  ஆங்கிலோ-இந்திய பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆங்கில வழியிலான கேள்வித்தாள்களே வழங்கப்படுகிறது. கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாகும் விவகாரம், தனியார்  பள்ளிகளில் மட்டுமின்றி அரசு பள்ளிகளிலும் இப்படி ஒவ்வொரு ஆண்டும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று, பெயர் சொல்ல விரும்பாத ஆசிரியர்களின் தகவலாக இருக்கிறது. மொத்தத்தில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் என்பது வெறும் சடங்கு அளவிலேயே நடத்தப்படுகிறது,  முறையாக இந்த தேர்வுகள் நடத்தப் படவில்லை என்பதும் தற்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது!


  இனியாவது இந்த தேர்வுகளை, முறையாக  நடத்துவதற்கு தேர்வுத் துறையும்,  பள்ளிக் கல்வித்துறையும் முன்வரவேண்டும் என்பதும், இதற்கு தேவையான நடவடிக்கைகளை அமைச்சர் செங்கோட்டையன் எடுக்க வேண்டும் என்பதும்  பெற்றோர் மற்றும் கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!


Post Top Ad