6 நாளாக நீடித்த ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் ஏன்? (முழு விவரம் ) - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 30, 2018

6 நாளாக நீடித்த ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் ஏன்? (முழு விவரம் )



சென்னையில் டிபிஐ அலுவலக வளாகத்தில் கடந்த 6 நாளாக நடந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நேற்று வாபஸ் ஆனது; கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து, அமைச்சர் தந்த  உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.

சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில் கடந்த 6 நாட்களாக உண்ணா விரதம் இருந்து வருகின்றனர். இரவு பகலாக குடும்பத்துடன்,  குழந்தைகளுடன் பெண் ஆசிரியர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழ்நிலையில் தினமும் குறைந்தபட்சம் 10 ஆசிரியர்களாவது மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். 


இதற்கிடையே, துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போல தங்களுக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை உணர்த்துவதற்காக, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் டிபிஐ வ ளாகத்தில் நேற்று  முன்தினம் துப்புரவு பணி செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் நாளுக்கு நாள் போராட்டம் வலுப்பெற்று வந்தது.

இடைநிலை ஆசிரியர்கள் இந்த உண்ணா விரதம் தொடங்குவதற்கு முன்னதாக, தொடர் உண்ணா விரதம், துப்புரவுப் பணி, ரத்ததானம், அதற்கு பிறகு உறுப்பு தானம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்களை அறிவித்தனர். இதன்படி  போராட்டம் தொடங்கிய 6வது நாளான நேற்று 6 ஆசிரியர்கள் ரத்ததானம் செய்தனர். இதைக் கண்ட மற்ற ஆசிரியர்களும் ரத்த தானம் செய்ய முன்வந்தனர். போலீசார் அவர்களை தடுத்தனர். இன்று உறுப்பு தானம் செய்ய  உள்ளனர்.  

இந்நிலையில் நேற்று மட்டும் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்தனர். இதுவரை 250 ஆசிரியர்கள் இதுவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருவதை அடுத்து, தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். நேற்று மதியம் 2 மணிக்கு பிறகு தொடக்க கல்வித்துறையில்  பேச்சுவார்த்தை நடந்தது. மாலை வரை நீடித்த பேச்சு வார்த்தையின் போது, போராட்டத்தை கைவிடவேண்டும் என்று கல்வி அதிகாரிகள் வலியுறுத்தினர்.


போராட்டத்தை கைவிட வேண்டும் என்றால், கோரிக்கை மீது ஏதாவது உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்க முடியும் என்று ஆசிரியர்கள்  தெரிவித்தனர். ஆனால், பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளரின் கருத்தை அறிந்த பிறகே எதுவும் தெரிவிக்க முடியும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், நேற்று இரவு 7 மணி வரை அரசு தரப்பில் இருந்து எந்த  பதிலும் வரவில்லை. இதையடுத்து, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டது. போராட்டத்தை கைவிடுவதா அல்லது தொடர்வதா என்பது குறித்து  பேசினர். 

இது  குறித்து அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது: ஒரு வாரமாக நாங்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறோம். ஆனால் அரசு எங்களை தொடர்ந்து அவமதித்து வருகிறது. ஜனவரி 7ம் தேதி அறிக்கை  வந்த பிறகு தெரிவிக்கிறோம் என்கிறார்கள். அதனால் ஏதாவது உறுதி கொடுங்கள் என்று கேட்கிறோம். பதில் இல்லை. 


எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து உண்ணா விரதத்தை முடித்து வைக்க வேண்டும். இந்நிலையில்  இரண்டாம் கட்டமாக தொடக்க கல்வி அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் தொடக்க கல்வி இயக்குனர் சில வாக்குறுதிகளை அளித்தார். தொடர்ந்து பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களுடன்  போனில் பேசினார். விரைவில் இதற்கான முடிவு அறிவிக்கப்படும். அதுவரை போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து தற்போதைக்கு இந்த போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது.

கருந்தேளால் பரபரப்பு
டிபிஐ வளாகத்தில் இரவு பகலாக ஆசிரியர்கள் தங்கி போராட்டம் நடத்தி வந்தனர்.  இந்நிலையில், ஆசிரியைகள் தூங்கிக் கொண்டு இருந்த ஒரு  பகுதியில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் கருந்தேள்  ஊர்ந்து சென்றது.  இதனால் ஆசிரியைகள் பதற்றம் அடைந்து கூச்சலிட்டனர். அந்த வளாகத்தில் தங்கியிருந்த  ஆசிரியர்கள் பதற்றத்துடன் அங்கு ஓடினர். அந்த தேளை கொன்று அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து  ஆசிரியைகள்  அச்சத்துடனேயே தூங்காமல் உட்கார்ந்து இருந்தனர்.


செயலாளர் விளக்கம்
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேற்று  இரண்டுகட்டமாக பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை  முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் சார்பில் ஆசிரியர்களுக்கு  எழுத்துப்பூர்வமாக பதில்  அளிக்கப்பட்டது.பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் சார்பில் வழங்கப்பட்ட பதில் அறிக்கை:இடைநிலை  பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தை சேர்ந்த,ஜூன் 2009ம் ஆண்டில் இருந்து  பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு ஊதிய முரண்பாடு இருப்பதாக  தெரிவித்துள்ளனர். பிற துறைகள் மற்றும்  பள்ளிக் கல்வித்துறை  சார்பான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு  நபர் ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்ேபாது அந்த குழு அரசிடம் அறிக்கை  தாக்கல் செய்ய உள்ளது.  அறிக்கை பெறப்பட்ட பிறகு தான் ஆசிரியர்களின்  கோரிக்கை மீது தீர்வு காணப்படும். எனவே ஆசிரியர்கள்  தங்கள் போராட்டத்தை கைவிடவேண்டும்.

Post Top Ad