பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் தேதி அறிவிக்க முடிவு - Asiriyar.Net

Wednesday, June 3, 2020

பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் தேதி அறிவிக்க முடிவு
பள்ளிப் பாடத் திட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வுக்கான விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் ஜூன் 10-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 1 வகுப்புக்கு எஞ்சியுள்ள 3 பாடங்களுக்கு ஜூன் 16-இல் பொதுத்தோ்வு நடைபெறவுள்ளது. அதேவேளையில் தோ்வுகள் முடிந்த பாடங்களுக்கான விடைத்தாள்கள், தற்போது மாவட்ட கட்டுக்காப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் உள்ளனா்.


இதற்கிடையே, பொது முடக்கத்தால் ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள், கடந்த மே 27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதையடுத்து பிளஸ் 1 விடைத்தாள்கள் ஜூன் 10-ஆம் தேதி முதல் திருத்தப்பட உள்ளன. அதற்கு முன்னேற்பாடாக கட்டுக்காப்பு மையங்களில் இருந்து விடைத்தாள்களை, மண்டல திருத்துதல் முகாம்களுக்கு இடமாற்றும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.


அதன்படி மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினா் பாதுகாப்பில் விடைத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டு வைக்கப்பட்டு வருகின்றன. அங்கு விடைத்தாள்களை அடையாளம் காண முடியாதபடி பிரித்து வைக்கவும், பணிகளை முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் துரிதமாக செய்து முடிக்கவும் அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் தோ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Post Top Ad