என்னமோ... ஏதோ! குழந்தை படிக்கும் பள்ளி விபரம்:கேட்கும் அரசால் கிளம்புது சர்ச்சை! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, October 5, 2019

என்னமோ... ஏதோ! குழந்தை படிக்கும் பள்ளி விபரம்:கேட்கும் அரசால் கிளம்புது சர்ச்சை!




கோவை:அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள், எங்கு படிக்கின்றனர் என்ற விபரத்தை, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழக பள்ளிகளின் நிலை குறித்த விபரங்கள் திரட்ட, பள்ளிக்கல்வி தகவல் முறைமை (எமிஸ்) உருவாக்கப்பட்டது. இதில், அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.இத்தகவல்களை அடிப்படையாக கொண்டு, ஆசிரியர் நியமனம், நலத்திட்ட பொருட்கள் வினியோகம், பொதுத்தேர்வுக்கு ஹால்டிக்கெட், அடையாள அட்டை உருவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.எமிஸ் இணையதளத்தில், தற்போது ஆசிரியர்களின் குழந்தைகளின் கல்வி விபரத்தை பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வித்துறையின் இந்த திடீர் அறிவிப்பு, ஆசிரியர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளிகளில்தான் இனி குழந்தைகளை சேர்க்க வேண்டுமென, அரசு அறிவிக்கப் போவதன் அறிகுறியோ இது என அலறுகின்றனர் பலர்.அறிவிப்பை வரவேற்கும் வேறு சிலர், மற்ற அரசு துறை ஊழியர்களிடமும் இக்கணக்கெடுப்பை நடத்த வேண்டும்; அரசுப்பள்ளிகளை மேம்படுத்த ஆரோக்கியமான திட்டங்களை அறிவிக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆசிரியர்களின் குழந்தைகள் எங்கு படிக்கின்றனர் என்ற விபரத்தை அளிப்பதன் மூலம், வெளிப்படைத்தன்மை ஏற்பட்டு விடும். என் குழந்தையை எங்கு சேர்ப்பது என்பது, தனிப்பட்ட விருப்பம் சார்ந்ததல்ல. குடும்ப உறுப்பினர்களின் முடிவும் உள்ளது. ஆசிரியர்களின் குழந்தைகள் தொழிற்கல்வி படித்தால் நிதியுதவியும் அளிக்கப்படுகிறது.

எனவே, இந்த அறிவிப்பை எதிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை.- அருளானந்தம் மாவட்ட தலைவர், பட்டதாரி ஆசிரியர் கழகம்'தனியார் பள்ளிகள் இனி செயல்படாது' என்ற ஒரு அரசாணை வெளியிட்டால் போதும், அரசுப்பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்து விடும். ஆசிரியர்களை போல, அனைத்து அரசு ஊழியர்கள், அமைச்சர்களின் குழந்தைகள் எங்கு படிக்கின்றனர் என்ற புள்ளிவிபரமும் திரட்ட வேண்டும். மாணவர் சேர்க்கை குறைந்தால் அதிகரிக்கும் வழிமுறைகளை கண்டறிவதை விடுத்து, ஆசிரியர்களின் குழந்தைகளின் விபரத்தை சேகரிப்பது சரியான நடைமுறையாக தெரியவில்லை.- சுரேஷ் மாநில தலைவர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்புள்ளிவிபரம் திரட்டுவதை வரவேற்கிறேன். நான் உட்பட பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளில் தான் படிக்க வைக்கிறோம்.

இதேபோல், அனைத்து தரப்பினரிடமும் விபரம் சேகரிக்க வேண்டும். அரசுப்பள்ளிகளை மேம்படுத்த ஆரோக்கியமான திட்டங்களை கொண்டுவர வேண்டும். பல ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் படித்து, சாதித்துள்ளனர். அதற்கான சூழலை, அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஏற்படுத்தி தர வேண்டும்.- பீட்டர் ராஜ் மாநில தலைவர், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கம்அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களின் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்பது தார்மீக ரீதியாக சரியானது தான். இதை அறிவிப்பாக வெளியிட்டு, ஊக்குவிக்கலாம். ஆனால், எமிஸ் இணையதளத்தில் தகவல் சேகரிப்பது, கட்டாயப்படுத்துவது போன்றது. சேர்க்கை குறைந்ததற்கு ஆசிரியர்களை மட்டுமே குறை கூறுவது சரியல்ல.- தங்கபாசு மாவட்ட செயலாளர், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி.

Post Top Ad