பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கோடை முடிந்து பள்ளிகள் திறப்பு - Asiriyar.Net

Tuesday, June 4, 2019

பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கோடை முடிந்து பள்ளிகள் திறப்புகோடை விடுமுறைக்கு பிறகு, கடும் தண்ணீர் பஞ்சத்தையும் கண்டுகொள்ளாமல் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. கடும் கோடை வெயிலும், தண்ணீர் பஞ்சமும் வாட்டி வதைப் பதால் பள்ளிகள் திறப்பதை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், பெற்றோர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி நேற்று பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன.

நேற்று காலை 8.30 மணிக்கே மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். இறை வணக்கத்திற்கு பிறகு வழக்கம் போல வகுப்புகள் தொடங்கின. ஆசிரியர்கள் செல்போன் மூலம் மாணவர்களின் வருகையை பதிவு செய்தனர். அதேபோல காலையில் பள்ளிக்கு வந்த அனைத்து ஆசிரியர்களும் பயோ மெட்ரிக் முறையின் கீழ் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்து வகுப்புக்கு சென்றனர். தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் பயோ மெட்ரிக் முறை நேற்று நடைமுறைக்கு வந்தது. உயர்நிலைப் பள்ளிகளில் சில இடங்களில் தொடங்கப்பட்டாலும், இன்னும் பல்வேறு இடங்களில் தொடங்க வேண்டியுள்ளது. புதிய பாடத்திட்டம் சில வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், அந்த வகுப்புகளுக்கான பாடப்புத்தகம் போதிய அளவில் அச்சிடாத நிலையில் பல பள்ளிகளுக்கு நேற்று புத்தகங்கள் வரவில்லை என்று தெரிவித்தனர். 

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புத்தகங்கள் அந்தந்த வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு புதிய சீருடைகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்த நிலையில் நேற்று பெரும்பாலான பள்ளிகளில் சீருடை வழங்கப்படவில்லை. இதையடுத்து மதியம் 2 மணி அளவில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றுகள் வழங்கப்பட்டு அதே இடத்தில் வேலைவாய்ப்பு பதிவு செய்யப்பட்டு அதற்கான எண்களும் வழங்கப்பட்டன. 

இதையடுத்து, நடுநிலைப் பள்ளிகளில் இயங்கும் 2381 அங்கன்வாடி மையங்களில் நேற்று எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள 5934 இடைநிலை ஆசிரியர்களும், அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள 1929 இடைநிலை ஆசியர்களும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பாடம் நடத்த நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, நேற்று பல பள்ளிகளில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை சேர்த்தனர். 

கோடை விடுமுறையான 45 நாட்களுக்கு பின் பள்ளிக்கு வந்த மாணவர்கள் தங்கள் நண்பர்களை கண்ட மகிழ்ச்சியில் பரஸ்பரம் நலம் விசாரித்து மகிழ்ந்தனர். உற்சாகத்துடன் வகுப்புக்கு சென்றனர். புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட 2, 4, 5, 7, 8, 9, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் நேற்று புதிய பாடத்திட்ட பாடங்கள் நடத்தப்பட்டன. பல தனியார் பள்ளிகளில்தான் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தன. அரசு பள்ளிகளில் தண்ணீர் இல்லாமல் மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். பல தனியார் பள்ளிகளில் பெற்றோருக்கு அனுப்பப்பட்ட மெசேஜில் மாணவர்கள் தண்ணீருடன் வரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். பள்ளிகளில் உள்ள கழிவறைகளில் தண்ணீர் இல்லாமல் மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

Post Top Ad