பள்ளிகளில் QR VIDEO பயன்படுத்தி கற்பித்தல் நடைபெறுகிறதா?? - Asiriyar.Net

Tuesday, October 23, 2018

பள்ளிகளில் QR VIDEO பயன்படுத்தி கற்பித்தல் நடைபெறுகிறதா??




மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டங்களில் டேப் அல்லது ஸ்மார்ட் போன் பயன்படுத்தி, கற்றல் வீடியோ பார்க்கும் முறை, அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே ஆர்வம் குறைந்துள்ளதால், பயன்பாடும் சரிந்துள்ளது.


தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், 1, 6, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. இதில், 1, 6, 9 வகுப்பு மாணவர்களுக்கு, கற்றலை சுவாரஸ்யமானதாக மாற்றுவதற்காக, பாடங்களுக்கு இடையில், 'க்யூ ஆர் கோடு' வழங்கப்பட்டிருந்தது. இதை ஸ்மார்ட் போன் அல்லது டேப்லெட் மூலம், ஸ்கேன் செய்தால், அதுகுறித்த வீடியோவை பார்க்க முடியும். 


இது மாணவர்கள், பாடங்களை ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக, ஆசிரியர்கள் வகுப்பறையில், ஸ்மார்ட் போன்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், தற்போது பெரும்பாலான பள்ளிகளில், ஸ்மார்ட் போன் அல்லது டேப் பயன்படுத்த, மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அவர்களிடையேயும் ஆர்வம் குறைந்துள்ளது.

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: ஸ்மார்ட் போன் மூலம், கற்றுக்கொள்வதை சுவாரஸ்யமாக்குவதற்காக, 'க்யூ ஆர் கோடு' வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால், அதை செயல்படுத்திய விதத்தில் பல குளறுபடிகள் உள்ளன. தேவையான இடங்களில், 'க்யூ ஆர் கோடு' இல்லாமல் இருப்பதும், தேவையற்ற இடங்களில் அதை வலுக்கட்டாயமாக திணித்ததும் என, பல சொதப்பல்கள் உள்ளன. மேலும் அந்த வீடியோக்களை பார்க்கும் போது, சுவாரஸ்யமானதாக இருக்க வேண்டும்; 


அதே சமயம், பாடத்தின் கருப்பொருளையும் மாணவர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். இதை எதையும், மேற்கண்ட வீடியோக்களால் செய்ய முடியவில்லை. இதனால், இந்த வீடியோக்களை மாணவர்கள் வேண்டா வெறுப்பாக பார்க்கின்றனர். இதனால், வகுப்பு நேரங்களில், கால விரயம் ஏற்படுவதோடு, மாணவர்களின் கவனம் திசை திரும்புகிறது. இதனால், பெரும்பாலான ஆசிரியர்கள், டேப்லேட் மற்றும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த முன்வருவதில்லை.

 வேறு சில ஆசிரியர்களே, ஸ்மார்ட் போனை வகுப்பறையின் பயன்படுத்த வழங்கப்பட்ட அனுமதியினை தவறான முறையில், சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post Top Ad