சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே குப்பன்கொட்டாய் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஜோதி என்பவர் சமையலராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சமைத்தால், தங்களுடைய குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சாதி இந்துக்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் ஜோதியையும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
ஜோதி அளித்த புகாரின் அடிப்படையில், ஆறு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவன், சின்னத்தம்பி, மகேந்திரன் ஆகிய மூன்று நேற்று முன்தினம் கைது செய்தனர் தீவட்டிபட்டி போலீசார். மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்படத் தலைமறைவாக உள்ள மூன்று பேரை போலீசார் தேடி வருகிறனர்.
இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டனம் தெரிவித்து, நேற்று (அக்டோபர் 14) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, "குப்பன்கொட்டாய் கிராமத்தில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் இனி எந்தப் பள்ளியிலும் நடைபெறக் கூடாது என்பதற்காக அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது.
அரசுப்பள்ளியில் நடைபெற்ற தீண்டாமை கொடுமை விவகாரத்தில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். சேலம் மாவட்டத்தில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் இதுபோன்ற சம்பவம் நடக்கிறதா என்பது குறித்து ஆய்வு நடத்த தனிக்குழு அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.