பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைப்பு - மத்திய அரசு அறிவித்தது - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, October 4, 2018

பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைப்பு - மத்திய அரசு அறிவித்தது






வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் செங்குத்தாக உயர்ந்து சென்ற நிலையில் மத்திய அரசு வரிவிதிப்பை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் அதில் இணைக்கப்படவில்லை. 

பெட்ரோல், டீசலையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. ஆனால், கலால் வரி குறைப்பு என்பதே கிடையாது என்ற ஸ்திரமான நிலையே மத்திய அரசு பின்பற்றியது.  


செப்டம்பர் 10-ம் தேதி இந்த விலைஉயர்வுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே ராஜஸ்தான், ஆந்திரபிரதேசம், மேற்கு வங்காளம் மாநிலங்கள் வாட் வரியை குறைத்தது. 

இருப்பினும் பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வில் தடையில்லாத நிலையே சென்றது. இந்நிலையில் டெல்லியில் போராட்டம் மேற்கொண்ட விவசாயிகளும் இப்பிரச்சனையை எழுப்பினார்கள். பல்வேறு தரப்பிலிருந்து விலை குறைப்பு தொடர்பாக கோரிக்கை வலுத்தது.


இந்நிலையில் பிரதமர் மோடியின் தலைமையில் ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு, வர்த்தக பற்றாக்குறை தொடர்பாக மூத்த மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2.50 குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் 1 ரூபாயும், மத்திய அரசு கலால் வரியில் 1.50 ரூபாயும் குறைக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகளும் ரூ.2.50 குறைக்க வலியுறுத்தப்படும். இதுதொடர்பாக மாநிலங்களுக்கு கடிதம் எழுதப்படும். மத்திய அரசின் வலியுறுத்தலை மாநில அரசுகள் ஏற்றால் விலை ரூ.5 குறைய வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.

Post Top Ad