‘மதிப்பெண் குறையும்’ என மாணவர்கள் ஆதங்கம் - Asiriyar.Net

Post Top Ad


Thursday, June 11, 2020

‘மதிப்பெண் குறையும்’ என மாணவர்கள் ஆதங்கம்
காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பொதுத்தேர்வுக்கு மதிப்பெண் வழங்குவதால் மதிப்பெண் குறையும்‘ என மாணவர்கள் ஆதங்கத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடத்தவேண்டாம் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு பொதுத்தேர்வை ரத்து செய்து நேற்று அறிவிப்பை வெளியிட்டது.


அதற்கு பதிலாக மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்ணும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்ணும் வழங்கப்படும் என்று முதல்அமைச்சர் கூறினார்.பொதுத்தேர்வு அறிவிப்புக்கு அனைவரும் வரவேற்பு தெரிவித்தாலும், அதற்கான மதிப்பெண் வழங்கும் முறையில் மாணவர்கள் பலர் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்து தற்போது மேலோங்குகிறது.


காரணம், கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டதால், புத்தகங்கள் அச்சிடும் பணிகளில் சற்று தாமதம் ஆனது. இதனால் அரசு பள்ளிகளை தவிர, தனியார் பள்ளிகளுக்கு புத்தகங்கள் தாமதமாகவே கிடைத்தன.

புத்தகங்கள் கிடைக்கும் வரை வழிகாட்டு புத்தகத்தை கொண்டு மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வந்ததாகவும், அரையாண்டு தேர்வுக்கு பிறகு தான் பாடப்புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு முழுமையாக கிடைத்ததாகவும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.


மேலும் புதிய பாடத்திட்டம் என்பதால் அதனை புரிந்து படிக்கவும் மாணவர்களுக்கு சற்று நாட்கள் பிடித்தது. இதனால் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் குறைவான மதிப்பெண் தான் மாணவர்கள் பலர் எடுத்து இருக்கின்றனர்.

ஆகவே, அதன் அடிப்படையில் பொதுத்தேர்வுக்கு மதிப்பெண் வழங்கினால் பள்ளி மாணவர்கள் பலர் பாதிக்கப்படுவார்கள் என்றும், மதிப்பெண் பெருமளவில் குறையும் என்றும் பேசப்படுகிறது. இதற்கு அரசு தான் தீர்வு சொல்லவேண்டும்என்று ஆசிரியர்களும், மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Recommend For You

Post Top Ad