பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு - Asiriyar.Net

Monday, June 17, 2019

பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு



தமிழகம் முழுவதும், ஏராளமான அரசு பள்ளிகளில், குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. மாணவர்கள் தவிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும், குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 'அரசுப் பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை. இது தொடர்பாக, இன்று பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும், பல்வேறு அரசுப் பள்ளிகளில், குடிநீர் பிரச்னை, அதிகளவில் உள்ளது. கோவை, திருப்பூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில், குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில், கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றிய பள்ளிகள், இதற்கு உதாரணம். இங்குள்ள கிராமங்களில், நிலத்தடி நீர்மட்டம், 1,000 - 1,500 அடிக்குக் கீழ் அதலபாதாளத்தில் உள்ளது. குடிநீர் திட்டங்கள் மூலம் சப்ளை செய்யப்படும் நீரும், ஒரு வாரம் கடந்து தான், பல்வேறு கிராமங்களுக்கும் வருகின்றன.இங்குள்ள, அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் பலவற்றிலும், குடிநீர் இணைப்புகள் பெயரளவுக்கு தான் இருக்கின்றன. குடிநீர் போதிய அளவு இல்லாமல், மாணவர்கள் தவிக்கின்றனர்.மாணவர்கள், தங்கள் டிபன் பாக்ஸ்களை கழுவுவதற்கு, தாங்களே தண்ணீர் கொண்டுவர வேண்டியுள்ளது அல்லது பள்ளிகளுக்கு அருகிலுள்ள நீராதாரங்களைத் தேடிச் செல்ல வேண்டியுள்ளது.


கழிவறைகளுக்குப் பயன்படுத்துவதற்கான தண்ணீருக்கும் சிக்கல்தான். சத்துணவு சமைப்பதற்கும், தண்ணீர் இல்லாமல், பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.திருப்பூர் மாநகராட்சி பள்ளிகளில், குடிநீர் பிரச்னை பெருமளவு இல்லை. இருப்பினும், மாணவர்கள் மற்றும் சத்துணவு தயாரிக்க, தாராளமான குடிநீர் சப்ளை இல்லை. 9மாநகராட்சியில் குறைந்தது, ஐந்து முதல், 10 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இந்த நீரை, தொட்டிகளில் தேக்கி வைத்து, பள்ளிகள் பயன்படுத்துகின்றன. திருப்பூர் மற்றும் பல்லடம் ஒன்றிய பகுதி பள்ளிகளில், குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது.தமிழகம் முழுவதும், இன்று பள்ளிகளில் நடைபெற உள்ள, குடிநீர் ஆய்வை முறையாக மேற்கொள்ள வேண்டும். அப்போது தான், உண்மையான நிலவரம் தெரியும். அதற்கேற்ப, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கையை, உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

Post Top Ad