ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை - விதிகள் உள்ளதா? - உயர்நீதிமன்றம் உத்தரவு - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, June 10, 2020

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை - விதிகள் உள்ளதா? - உயர்நீதிமன்றம் உத்தரவு
பள்ளி மாணவ – மாணவிகளுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. 

ஆன்லைன் மூலம் வகுப்புக்களில் கலந்து கொள்ள மாணவ, மாணவிகள் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால், அந்த இணையதளங்களை மாணவ, மாணவிகள் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.


அந்த மனுவில், மாநிலத்தில் 8 சதவீத வீடுகளில் மட்டுமே இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர்கள் உள்ளதாகவும், டிஜிட்டல் முறையில் பாடம் நடத்துவதால் நகர்புற – கிராமப்புற மற்றும் ஏழை – பணக்கார மாணவர்களுக்கு இடையில் சமநிலையற்ற நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முறையான டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவர்களும், ஆசிரியர்களும் சவால்களை சந்தித்துள்ளதாகவும், பல இடையூறுகள் உள்ளதாகவும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆபாச இணையதளங்களை மாணவ, மாணவிகள் பார்ப்பதை தடுக்கும் வகையில், சட்ட விதிகளின்படி, முறையான விதிகளை வகுக்காமல் ஆன்லைன் வகுப்புக்களை நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.


இந்நிலையில், இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த விதிகள் வகுக்கும் திட்டம் உள்ளதா? என அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குப்படுத்த என்னென்ன விதிமுறைகள் கொண்டுவரப்படும்? என்பது குறித்து இரண்டு வாரங்களில் மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

Recommend For You

Post Top Ad