தமிழக பள்ளிகளில் பாடபுத்தகம் கொடுக்காததால் ஜெராக்ஸ் எடுத்து படிக்கும் மாணவர்கள்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, June 9, 2019

தமிழக பள்ளிகளில் பாடபுத்தகம் கொடுக்காததால் ஜெராக்ஸ் எடுத்து படிக்கும் மாணவர்கள்!


தமிழக பள்ளிகளில் புதிய பாடபுத்தகத்திட்டபுத்தகங்கள் முழுமையாக தயாராகாததால் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு ஜெராக்ஸ் நகல் வழங்கி அதை  வைத்து படிக்கும் நிலை தொடர்கிறது. தமிழக பள்ளிக்கல்வித்துறை கடந்த கல்வியாண்டில் 1, 3, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான பாடபுத்தகங்கள் மாற்றப்பட்டு புதிய பாடத்திட்ட புத்தகங்கள்  அறிமுகம் செய்யப்பட்டன.

இதில் கடந்த ஆண்டு பள்ளி திறந்த பின்னரும் புதியாக மாற்றம் செய்யப்பட்ட வகுப்புகளுக்கு பாடபுத்தகங்கள் முழுமையாக  மாணவர்கள் கைகளில் சென்றடையாத நிலை இருந்தது.  மேலும் புதிய பாடத்திட்டமும் ஏற்கனவே இருந்ததைவிட கடினமானதாக இருந்தது. சில பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு வரை முக்கிய  பாடபுத்தகங்கள் கிடைக்காமல் இருந்ததால் மாணவர்களும் கற்பிக்கும் ஆசிரியர்களும் சிரமப்பட்டனர்.

இது தேர்வு முடிவுகளிலும் எதிரொலித்தது. கடந்த  கல்வியாண்டில் பாடத்திட்டம் மாற்றப்பட்ட பிளஸ்1 வகுப்பில் கணிதம் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் செண்டம் எண்ணிக்கை மிகவும் சரிந்தது.இந்த நிலையில் நடப்பு புதிய கல்வியாண்டிற்கு கடந்த ஆண்டில் மாற்றப்பட்ட வகுப்புகள் தவிர 2, 3, 4, 5, 7, 8, 10, 12 வகுப்புகளுக்கு புதிய  பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 352 பக்கங்கள் முதல் 368 பக்கங்கள் கொண்ட  பாடபுத்தகம் விலை ரூ.180 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய பாடபுத்தகங்கள் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் தயாராகும் பணி கடந்த ஆண்டு ஜூலை  மாதம் முதல் நடந்து வந்தது. இது பள்ளி  திறப்பதற்கு முன் நிறைவு பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முடியாத நிலையில் கடந்த 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி திறக்கும் நாளிலேயே பல பள்ளிகளில் சில பாடபுத்தகங்கள் வழங்கப்படவில்லை. குறிப்பாக 3, 4, 5 வகுப்புகளுக்கு உரிய ஆங்கில வழிக்கல்வி  பாடபுத்தகங்கள் பல தனியார் பள்ளிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை. 

இதனால் புதிய பாடத்திட்டப்படி மாணவர்கள் கைகளில் புத்தகம் இல்லாமலேயே ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் நிலை நீடிக்கிறது. மேலும்  வீட்டுப்பாடம் (ஹோம் ஒர்க்) வழங்குவதிலும் சிக்கல் உள்ளது. சில பள்ளிகளில் ஆசிரியர்கள் ஆன்லைனில் இருந்து பாடங்களை டவுன்லோடு ெசய்து  அதனை ஜெராக்ஸ் எடுத்து கொடுத்து கற்றுத்தருகின்றனர். எனவே அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் விடுபட்ட புதிய பாடபுத்தகங்களை உடனடியாக மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடுகள்  செய்யவேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Post Top Ad