கல்வித்துறை உத்தரவால் சிக்கலில் 2 ஆயிரம் ஓய்வு தலைமையாசிரியர்கள் - Asiriyar.Net

Sunday, January 18, 2026

கல்வித்துறை உத்தரவால் சிக்கலில் 2 ஆயிரம் ஓய்வு தலைமையாசிரியர்கள்

 



நிதித்துறையை குறிப்பிட்டு கல்வித்துறை பிறப்பித்த உத்தரவால், ஓய்வு பெற்ற 2,000 தலைமையாசிரியர்கள் ஓய்வூதிய பலன்களை பெற முடியாத சிக்கலில் உள்ளனர். 


தொடக்க கல்வியில், 2006 முதல் பணியாற்றும் தலைமையாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிக் காலத்தில் தேர்வு நிலை பெற்றதற்காக, 2006 ஜன., 1 முதல் தர ஊதியம், 5,400 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. இது, 19 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. 


2024, செப்., வரை தணிக்கை தடையின்றி மாநில கணக்காயர் அலுவலகத்தால் உரிய ஓய்வூதிய பணப்பலன்களும் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், நிதித்துறை கடிதத்தை சுட்டிக்காட்டி கல்வித்துறை துணை செயலர், 'இந்த நிர்ணயம் நிதித்துறை உத்தரவுக்கு மாறானது' என, 2024ல் தர ஊதியத்தை, 4,700 ரூபாயாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. 


இதுதொடர்பாக, தணிக்கை தடை விதித்து, 2024 அக்., முதல் ஓய்வு பெறுவோருக்கு அவரவர் நிலைக்கு ஏற்ப, 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை திரும்ப செலுத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. இதனால் 2,000க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் ஓய்வுக்கால பணப்பலனை பெற முடியாமல் தவிக்கின்றனர். இவர்கள் நீதிமன்றத்தை நாடும் நிலைக்கு அரசு தள்ளியுள்ளது. 


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலர் சீனிவாசன் கூறியதாவது: பொதுவாக, சட்டம், விதிகளை பின்பற்றி அரசு உத்தரவு பிறப்பிக்கப்படும். அதை பின்பற்றி தான் துறைகள் வாரியாக அதிகாரிகளின் செயல்முறைகள் இருக்க வேண்டும். ஆனால், சமீபத்தில் அரசின் பெரும்பாலான தணிக்கை தடைகள், அரசாணைகளை பின்பற்றாமல், அரசு கடிதம், செயல்முறைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 


இதனால் தான் நீதிமன்ற வழக்குகள் அதிகரித்து வருகின்றன. தர ஊதியம் குறைக்கப்பட்ட உத்தரவு குறித்து, தகவல் அறியும் சட்டத்தில் கேட்கப்பட்ட போது, 'நிதித் துறையின் சம்பள நிர்ணயங்களை எங்களுக்கு குறைக்க அதிகாரமில்லை' என, கல்வித்துறை துணைச் செயலர் பதில் அளித்துள்ளார். அவரது உத்தரவுக்கு, அவரே முரணாக பதில் அளித்துள்ளது வினோதமாக உள்ளது. தணிக்கை தடைகளை நீக்க தடையின்றி ஓய்வூதிய பலன்களை வழங்க அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment

Post Top Ad