மாணவர்களே குடிநீர் கொண்டு வரவேண்டும்: ஆசிரியர்கள் கட்டளையால் பெற்றோர் அதிர்ச்சி - Asiriyar.Net

Saturday, June 8, 2019

மாணவர்களே குடிநீர் கொண்டு வரவேண்டும்: ஆசிரியர்கள் கட்டளையால் பெற்றோர் அதிர்ச்சி




தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை அடுத்து, பள்ளிக்கு வரும் மாணவர்கள் வீட்டில் இருந்தே குடிநீர் எடுத்து வரவேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள் கட்டளையிட்டுள்ளனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக நிலவும் கடுமையான வெயில் காரணமாக நீர்நிலைகள் வறண்டுவிட்டன. நிலத்தடி நீரும் குறைந்து தாவரங்கள் கருகி வருகின்றன.

விவசாயத்துக்கு தண்ணீர் இன்றி பயிர்தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல பொதுமக்களுக்கு அன்றாட தேவைக்கு கூட குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எல்லா இடத்திலும் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் தங்கள் அன்றாட தேவைக்காக பணம் கொடுத்து தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். குடிநீரும் அதேபோல விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளிகளில் கழிப்பிடங்களுக்கான தண்ணீர் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளதாக அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதனால், பள்ளிகளில் குடிநீர் வசதி செய்து கொடுப்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளிகளில் குடிப்பதற்குரிய குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், சென்னையில் இயங்கும் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் குடிநீருக்கு செலவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், மாணவ, மாணவியரே தங்கள் வீடுகளில் இருந்து குடிநீர் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளன. அதேபோல, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் வீட்டில் இருந்தே குடிநீர் கொண்டு வர வேண்டும் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


பள்ளிக்கு வரும் மாணவர்கள் நாள் ஒன்றுக்கு 2 பாட்டில்களில் குடிநீர் எடுத்து வந்தால்தான் அவர்களால் சமாளிக்க முடியும். ஆனால் வீட்டுத் தேவைக்கே குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில், பள்ளிக்கு எப்படி குடிநீர் கொடுத்து அனுப்ப முடியும் என்று பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், புத்தகச் சுமையுடன் இப்போது மாணவர்கள் குடிநீர் பாட்டில்களையும் சுமந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். 

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால், கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதிகள் என்று வரும் போது போதிய அளவில் அதை செய்து கொடுப்பதில்லை. குறிப்பாக, பரங்கிமலையில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளி நிர்வாகம் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கடிதம் மூலமாக, வீட்டில் இருந்தே குடிநீர் எடுத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.

சென்னை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் இயங்கும் 907 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பெரும்பாலும் மாநகராட்சி வினியோகம் செய்யும் குழாய் நீரையே நம்பி இருக்கின்றனர். அவர்களால் பாட்டில் குடிநீரையோ அல்லது மினரல் வாட்டரையோ எப்படி எடுத்து வர முடியும். அரசுப் பள்ளிகளில் கழிப்பறைக்கு தேவையான நீரை எங்களால் சமாளிக்க முடியும். ஆனால் குடிநீர் பிரச்னையை சமாளிக்க முடியவில்லை என்று தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதே நிலை நீடித்தால் பள்ளிக்கு மாணவர்கள் வருவது குறையும் நிலை ஏற்படும்.

Post Top Ad