School Morning Prayer Activities - 21.03.2019 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, March 21, 2019

School Morning Prayer Activities - 21.03.2019







பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 155

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

உரை:

( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

பழமொழி:

Necessity has no law



ஆபத்துக்கு பாவமில்லை

பொன்மொழி:

தாராள மனம் படைத்த முதலாளி அவரது தொழிலாளி எவரையும் எந்நாளும் கைவிட மாட்டார்.

- ஜி.டி.நாயுடு

இரண்டொழுக்க பண்பாடு :

1) அனை‌த்து மக்களும் கடவுளின் சாயலே எனவே அனைவரையும் மதித்து நடப்பேன்.

2) தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நீதி போதனைகளை என்னால் முடிந்த அளவு கடை பிடிப்பேன்.

பொது அறிவு :

1) கப்பல்களில் சரியான நேரத்தை கணக்கிட பயன்படும் கருவி எது ?

 குரோனோ மீட்டர்(Chronometer)

2) குறைந்த அளவு மின்னோட்டத்தை அளக்கப் பயன்படும் கருவி எது?

  கால்வனோ மீட்டர்(Galvanometer)

நீதிக்கதை :

கடற்கரை ஓரம் இருந்த ஊரில் ஒரு கலங்கரை விளக்கு இருந்தது. அந்தக் கடற்கரை ஒரம் கப்பல் போக்குவரத்து அதிகம்.

பாறைகள் நிறைந்த கடல் பகுதியானதால் கப்பல்கள் பாறைப் பகுதியைத் தவிர்த்து பத்திரமாகச் செல்ல வகை செய்யும் வண்ணம் அந்தக் கலங்கரை விளக்கை அமைத்திருந்தார்கள். எண்ணையால் எரியும் விளக்கு அது.


கலங்கரை விளக்கை செயல்படுத்த ஒரு காப்பாளன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான்.

வாராவாரம் கலங்கரை விளக்கிற்குத் தேவையான எண்ணையை கப்பல் நிறுவனங்கள் அவனுக்குத் தப்பாமல் அனுப்பிக் கொண்டிருந்தன.

காப்பாளனின் முக்கியமான வேலை கலங்கரை விளக்கைக் காப்பது மற்றும் விளக்கு அணையாமல் அதைச் செலுத்திக் கொண்டிருப்பது மட்டுமே.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது.

ஒரு கடுங் குளிர்கால இரவில் கலங்கரை விளக்கின் அலுவலகக் கதவை யாரோ தட்டினார்கள். காப்பாளன் கதவைத் திறந்து பார்த்தான். பக்கத்து ஊரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் குளிரில் நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தார்.

“தம்பி! என் வீட்டில் விளக்கெரிக்கக் கூட எண்ணை இல்லை. குளிர் நடுக்குகிறது. நீ மிகவும் நல்லவனாகத் தெரிகிறாய். கொஞ்சம் எண்ணை கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன். சீக்கிரம் திருப்பிக் கொடுத்து விடுவேன்” என்று கெஞ்சினார்.

மனமிளகிய காப்பாளன் அவருக்குக் கொஞ்சம் எண்ணை கொடுத்தனுப்பினான்.

அடுத்த நாள் இரவு மறுபடியும் கதவில் “டக்… டக்”. கதவைத் திறந்தால் ஒரு வழிப்போக்கன். “அண்ணே! பக்கத்து ஊரில் உங்கள் உதவும் குணத்தைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார்கள். நான் அவசரமாக ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். மிகவும் முக்கியமான வேலையாகப் போய்க் கொண்டிருக்கிறேன். இங்கே தங்க முடியாத நிலை. என் கை விளக்கில் எண்ணை தீர்ந்து விட்டது. பயணத்திற்கு எண்ணை கொடுத்து உதவினால் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்” என்று வெகு இளக்கமாகப் பேசினான்.

காப்பாளனும் வழிப்போக்கனுக்கு எண்ணை கொடுத்த்னுப்பினான்.

மூன்றாம் நாளும் இதே கதை தொடர்ந்தது. இப்போது கதவைத் தட்டியது ஒரு மூதாட்டி. “ராசா. நீ நல்லாயிருக்கணும். வீட்டில் பச்சைக் குழந்தைக்குப் பால் காய்ச்ச அவசரமாக அடுப்பு எரிக்கணும். வீட்டில் எண்ணை தீர்ந்து போய் விட்டதப்பா! எனக்கு உன்னை விட்டால் வழியில்லை என்று வந்து விட்டேன். நீதான் அவசரத்துக்குக் கடவுள் போல் கை கொடுத்து உதவணும்” என்றாள்.
அவளுக்கும் காப்பாளன் எண்ணை கொடுத்தான்.

வாரக் கடைசி. அடுத்த வாரத்திற்கான எண்ணையைக் கொண்டு வரும் வண்டி வர இரண்டு நாளாகும். காப்பாளன் வழக்கம் போல விளக்கிற்கு எண்ணை நிரப்ப பீப்பாயைத் திறந்து பார்த்தான். பீப்பாயில் இருந்த எண்ணை வாரக் கடைசி வரை விளக்கைச் செலுத்தப் போதாது என்று புரிந்தது.

இருந்த எண்ணையை விளக்கில் நிரப்பி அதை எரிய விட்டு விட்டு பதறிப் போய் ஊருக்குள் ஒடினான். மிக அவசரமாக விளக்கிற்கு எண்ணை தேவை. கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டான். எல்லோரும் கை விரித்து விட்டார்கள்.

வாரக் கடைசியில் இரவில் எண்ணை தீர்ந்து போய் விளக்கு அணைந்து விட்டது. இரண்டு கப்பல்கள் அன்று இரவு கலங்கரை விளக்கு எரியாததால் வழி தவறிப் போய் பாறையில் மோதிச் சிதறி விட்டன.

மூன்று பேருக்கு உதவுவதற்காக தன் முதன்மைக் கடமையில் தவறிய காப்பாளன், முன்னூறு பேரின் உயிர் சேதத்திற்குக் காரணமானான்.


இன்றைய செய்தி துளிகள் : 

1) பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி ஏப்ரல் 19-ம் தேதி வெளியிடப்படும்: பள்ளிக் கல்வித் துறை

2) அரசின், 'நீட்' பயிற்சி மார்ச் 25ல் துவக்கம்

3) அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல்  மாணவர் சேர்க்கை 



4) தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பேட்டி

5) ஐபிஎல் டி20 தொடருக்கான லீக் சுற்று அட்டவணை முழுமையாக அறிவிப்பு.


Post Top Ad