"செயல்வழி கற்றல்" உருவானது எப்படி? புரட்சி அல்ல இது - அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்த ஒரு கலெக்டரின் முயற்சி இது - Asiriyar.Net

Post Top Ad


Monday, June 22, 2020

"செயல்வழி கற்றல்" உருவானது எப்படி? புரட்சி அல்ல இது - அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்த ஒரு கலெக்டரின் முயற்சி இதுஇந்த கல்வி முறை, ஆந்திராவில் உள்ள அரசு பள்ளிகளிலும் பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. 20ம் நூற்றாண்டில் இறுதியில், கர்நாடகாவிலும் இம்முறை பின்பற்றப்பட்டது. 
மாணவர்களை மையமாக வைத்து நடத்தப்படும் இந்த கல்வி முறை, பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அனைத்து பகுதிகளிலும் அல்லாமல், இங்கொன்றும், அங்கொன்றுமாகவே செயல்படுத்தப்பட்டது. அரசு பள்ளியோ, தனியார் பள்ளியோ இந்த நடைமுறையை தங்கள் பள்ளிகளில் அறிமுகப்படுத்த முன் வரவில்லை.தமிழகத்தின் பள்ளிக் கல்வி இயக்க வரலாறு: தமிழக்தில் முதன்முறையாக, பெரிய அளவில் துவக்கப்பட்டது வயது வந்தோர் கல்வி திட்டம் தான். 1970 – 80 ஆண்டுகளில் அறிவொளி இயக்கம் என்ற அமைப்பால், இது உருப்பெற்றது. எனவே, அவர்களுக்கு ஆர்வம் ஏற்படும் வகையிலும், எளிதில் உணர்ந்து கொள்ளும் வகையிலும், கற்பித்தல் முறையை கையாள்வது, இந்த திட்டத்தின் அவசியம் ஆனது. ஆசிரியர்களும், மாணவர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றும் வகையில் கிராம திட்டங்களையும், அறிவொளி இயக்கம் செயல்படுத்தியது. 


தமிழகத்தில், 80 -90 ஆண்டுகளில் உருவான அடுத்த பெரிய கல்வி இயக்கம், மக்களின் அறிவியல் இயக்கம் தான். கேரள சாஸ்திரீய சஹஸ்த பரிஷத் மற்றும் தமிழ்நாடு அறிவியல் அமைப்பு (டி.என்.எஸ்.எப்.,) ஆகியவை இணைந்து ஆடல், பாடல், நாடகம் ஆகியவற்றின் மூலம் அறிவியல் கல்வியை போதித்தன. அறிவியல் கொள்கைகளை, செயல்வழி கல்வி மூலம் விளக்கும் நடைமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 

இந்த இரண்டு இயக்கங்களுமே, தானாக முன்வந்து செயல்படும் வகையில் அமைந்தன; ஆசிரியர், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களை ஒருங்கிணைத்து, தங்கள் திட்டங்களை செயல்படுத்தின. இந்த இயக்கங்களுக்கு, மாநிலத்தின் அரசியல் மற்றும் தொழிலதிபர்களின் ஆதரவும் கிடைத்தது

கற்பித்தல் முறையில் மாற்றங்களும், கல்வி சீர்திருத்தமும் ஒருங்கிணைந்தது எப்படி? கற்பித்தல் முறையில் நடத்தப்பட்ட தனித்தனி பரிசோதனைகளால் தமிழகத்தில் கல்வி சூழலில் தேக்கம் ஏற்பட்டு, கல்வி இயக்கங்களும் பெருகிய நிலையில், பிரதான கல்வி சூழலில், குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாக்க வேண்டிய நேரம் வந்தது. 


ஆனால், இந்த அடிப்படை மாற்றத்தை உருவாக்க, சிறந்த அறிஞர் தேவைப்பட்டார். அதற்கான சிறந்த உதாரணமாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயகுமார் கிடைத்தது, தமிழகத்தின் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். சமூக மாற்றத்துக்கு, சீர்மிகுந்த பள்ளி கல்வி அவசியம் என்பதை, அவர் அனுபவமாக உணர்ந்திருந்தார். முதல்வரின் தனிச் செயலர், மாவட்ட கலெக்டர் உட்பட பல பதவிகள் வகித்த அவர், பள்ளி கல்வியில் தனி ஈடுபாடு காட்டினார்.

கடந்த 90ல் வேலூரில் கலெக்டராக இருந்த போது, பள்ளி செல்ல வேண்டிய வயதை அடைந்த நிறைய குழந்தைகள், வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் பாடம் பயில்வதை அறிந்தார். அவர்கள் அனைவரும், அருகிலுள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் என்பதையும் அறிந்தார். இக்குழந்தைகளை பள்ளிக்கு மீண்டும் ஈர்க்க, “யுனிசெப்’ ஆதரவுடன், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் ஆதரவு திட்டம் (கிளாஸ்) ஒன்றை துவங்கினார். 


வேலூரை சேர்ந்த சண்முகம், பிச்சையா உட்பட சிறந்த ஆசிரியர்களையும் இத்திட்டத்தோடு இணைத்துக் கொண்டார். இவர்கள் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல; தமிழ்நாடு மாணவர் அமைப்பு மற்றும் அறிவொளி இயக்கம் ஆகியவற்றின் தொண்டர்களும் கூட; கற்பித்தலில் உள்ள பல முறைகளை அறிந்தவர்கள். “கிளாஸ்’ திட்டம் அரசு பள்ளி வளாகத்திலேயே நடத்தப்பட்டது. 


ஆடல், பாடல் போன்ற செயல்வழிகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இதை நேரில் கண்ட அரசு பள்ளி மாணவர்களும், இதனால் ஈர்க்கப்பட்டனர். விளைவு, இவர்களுக்கான ஆசிரியர்களும், இது போன்ற கற்பித்தல் பயிற்சியை எடுத்து கொள்ள வேண்டிய சூழல் உருவாயிற்று.

இது தான், “மகிழ்ச்சியுடன் கற்கும் முறை’ தமிழகத்தில் உருவாக காரணம் ஆயிற்று. ஆனால், இந்த திட்டத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்க முடிந்தது. வகுப்பறையையோ, பாடத் திட்டத்தையோ மாற்ற முடியவில்லை. இதனால், இந்த முறைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. “கிளாஸ்’ திட்டத்தின் மூலம் பாடம் நடத்தியவர்கள், ரிஷி வேலி பள்ளிக்கும் சென்று, கற்பிக்கும் நடைமுறைகளை கற்று கொண்டனர். 


செயல்வழிக் கல்வி சூழலை உருவாக்கும் ஆசிரியர்கள், முதல் அக்கல்வி முறையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலான ஆசிரியர் பயிற்சி திட்டங்கள், கற்பித்தல் அடிப்படையில் அமைந்தவையாகவும், இப்பயிற்சியை பெறுபவர்கள், செவிவழி அறிவை பெறுபவர்களாகவே மட்டும் இருந்தனர். தமிழக பள்ளி கல்வித் துறையின் கூடுதல் செயலராக இருந்த விஜயகுமார், இந்த முரண்பாட்டை நன்கு புரிந்து கொண்டார்.

சென்னையில் உள்ள ஆசிரியர் தொழிற்பயிற்சி நிறுவனமான “ஸ்கூல்ஸ்கேப்’ நிறுவனர் ஆமுக்தா மஹாபாத்ராவின் உதவியுடன், செயல்வழி மற்றும் பங்கெடுப்பு முறையிலான ஆசிரியர் பயிற்சி முறை ஒன்று உருவாக்கப்பட்டது. ஆமுக்தா மஹாபாத்ரா, முன்பு நீல் பாக் பள்ளியில், டேவிட் ஹார்ஸ்பர்கிடம் நேரடி பயிற்சி பெற்றவர். 


தொடர்ந்து, சென்னை கார்ப்பரேஷன் கமிஷனராக விஜயகுமார் பணியமர்த்தப்பட்டது, பள்ளிகளில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பை அமைத்து கொடுத்தது. 300 பள்ளிகளில் மாற்றம் கொண்டு வர தீர்மானித்தார். ரிஷி வேலி பள்ளிக்கு சென்று, அங்குள்ள பயிற்சி முறைகளை கண்டறிந்து, அவற் றை தமிழகத்தில் செயல்படுத்த தீர்மானித்தார். மேலிருந்து கீழ் என்ற அணுகுமுறையை கைவிட்டு, அடிப்படை மாற்றத்தையே செயல்வழித் திட்டம் போலச் செயல்படுத்தினார். 

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தன்னார்வ ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து, 13 பள்ளிகளில் பரிசோதனை அடிப்படையில், செயல்வழிக் கல்வியை அறிமுகப்படுத்தினார். இப்போது இத்திட்டம், செயல்வழிக் கல்வி திட்டம் (ஆக்டிவிட்டி பேஸ்டு லேர்னிங்) என்றழைக்கப்படுகிறது. விஜயகுமாரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பள்ளி ஆசிரியர்களும், ரிஷி வேலி பள்ளிக்கு சென்றனர். அங்கு நடைமுறையில் உள்ள கற்பித்தல் முறையை பயின்று திரும்பினர். மிகுந்த போராட்டங்களுக்கிடையில், இக்கல்வி முறையை தங்கள் பள்ளிகளில் அறிமுகப்படுத்தினர்.


சென்னை, சைதாப்பேட்டையில் அமைந்துள்ள மாந்தோப்பு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி என்பவர், இத்திட்டத்தில் திருப்தி அடையவில்லை. விஜயகுமாருடன் வாக்குவாதம் செய்தார். பள்ளியில் இத்திட்டத்தை அமல்படுத்தி, இத்திட்டம் ஏன் வெற்றிகரமாக செயல்படாது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து, தன்னிடம் தெரிவிக்குமாறு, விஜயகுமார் பணித்தார். 

இதை சவாலாக ஏற்ற அந்த ஆசிரியை, இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவர் எதிர்பாராத வகையில், இத்திட்டம் மாபெரும் வெற்றி கண்டது. உற்சாகம் அடைந்த விஜயகுமார், சென்னை கார்ப்பரேஷன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், செயல்வழிக் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்த தயாரானார். இதற்கான உபகரணங்களை தயார் செய்ய, இந்த 13 பள்ளி ஆசிரியர்களும் பணிக்கப்பட்டனர். 


அரசு பள்ளி ஆசிரியர்களின் திறமை மீது, விஜயகுமாருக்கு அபார நம்பிக்கை உண்டு. பள்ளி கல்வி அமைப்பின், மிக முக்கியமான அங்கம் ஆசிரியர்கள் தான் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இந்த மறுமலர்ச்சியில், இவர்களின் பங்கு மிக முக்கியமானதாக விளங்க வேண்டுமென விரும்பினார். 

இவர்களை உற்சாகப்படுத்த, அரசு துறையில் உள்ள அனைத்து உயரதிகாரிகளையும் அழைத்து, இவர்களின் திறமையான செயல்பாடு குறித்து காட்டினார். இதனால் ஆசிரியர்கள் பெருமை அடைந்ததோடு, பள்ளி கல்வி மறுமலர்ச்சிக்கான சொந்தக்காரர்கள் என்ற கவுரவமும் கிடைத்தது.


இதையடுத்து, சென்னை கார்ப்பரேஷன் பள்ளிகள் அனைத்திலும், இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. விஜயகுமாரின் திறமையா அல்லது விதியா என தெரியவில்லை; மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி திட்டமான, “சர்வ சிக்ஷா அபியான்’ திட்டத்தின் தமிழக திட்ட இயக்குனராக விஜயகுமாரே பணியமர்த்தப்பட்டுள்ளார். 

செயல்வழிக் கல்வி திட்டத்தை மாநிலம் முழுதும் அமல்படுத்தக் கூடிய அனைத்து சாதனங்களும் தயார் செய்த விஜயகுமார், வேலூர் முதல் சென்னை உட்பட ஆசிரியர் குழுவையும் கைவசம் வைத்துள்ளார். கல்வியாளர்கள் ஆமுக்தா மஹாபாத்ரா, அனந்தலட்சுமி போன்றோருடன் பணி செய்யும் திறனையும் கொண்டிருக்கிறார். 


இதோடு, கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் அமைப்பின் பள்ளியான, “தி ஸ்கூல்’ ஆசிரியர்களையும் துணைக்கு அழைத்திருக்கிறார். “சர்வ சிக்ஷா அபியான்’ திட்டத்தின் துணை இயக்குனர்கள் லதா, கண்ணப்பன், இளங்கோவன் ஆகியோர், பள்ளி கல்வி மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள்; திறமையாக செயல்படக் கூடியவர்கள். ஆலோசனைக்கென, வேலூரிலிருந்து சண்முகம், பச்சையப்பன், சென்னை கார்ப்பரேஷன் கல்வி அதிகாரியான மாலதி, ஆசிரியர் பள்ளி கல்வி இயக்குனரக அதிகாரி ரத்னவேல் ஆகியோரும் உள்ளனர்.


கற்பிக்கும் அனுபவம், கல்வி கோட்பாடு மற்றும் நிர்வாக அனுபவம் ஆகியவை இந்த அணியின் பலம். இந்த மறுமலர்ச்சி திட்டம் நல்ல முறையில் வெற்றி பெற, இவர்களின் அனுபவமும், முயற்சியும் இன்றியமையாதவை. புதிய முறையை அமல்படுத்த, மாடல் பள்ளிகள் தேர்தெடுக்கப்பட்டன. பின், ஆரம்ப பள்ளி அனைத்திலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது. பயிற்சி பெற்ற 13 பள்ளி ஆசிரியர்களின் போன் எண்கள், மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளன. அரசியல்வாதிகள் ஆதரவு இல்லையெனில், இத்திட்டம் நிறைவேறி இருக்காது. தமிழக கட்சிகள் அனைத்தும் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.குறுகிய காலத்தில், அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளின் ஒத்துழைப்பினால், பள்ளிகளில் மிகப்பெரிய மாறுதலை உருவாக்க முடிந்தது. துவக்க நிலையில் உள்ள இத்திட்டத்தை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு குழப்பமாகவே தோன்றும். ஆழமாக பார்க்கும் போது, ஆசிரியர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அமையும், சக்தி வாய்ந்த, ஆரோக்கியமான திட்டம் இது என்பது விளங்கும். 

தொடர் மதிப்பீடுகளும், கண்காணிப்புகளும் இத்திட்டத்திற்கு இன்றியமையாதவை. அதிகார வர்க்கத்தின் மூலம், அரசு செயல்பாட்டிலேயே மாற்றம் கொண்டு வந்துள்ள, அபூர்வ திட்டம் இது. இத்தகைய மறுமலர்ச்சியின் வரலாற்று பின்னணியையும், திட்டத்தின் தற்போதைய செயல்பாட்டையும் பார்க்கும் போது, பள்ளி கல்வியில் ஏற்பட்ட புரட்சி என்று சொல்வதை விட, பரிணாம வளர்ச்சி என்று சொல்வதே பொருத்தம்!

Recommend For You

Post Top Ad