க(டின)ணிதம் - ஆசிரியர்களின் குமுறல்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, March 25, 2019

க(டின)ணிதம் - ஆசிரியர்களின் குமுறல்!


10 ஆம் வகுப்புக் குழந்தைகளுக்கான கணக்குப் பாடத் தேர்வு வினாத்தாள் தயாரித்த உயர்ந்த மனிதர்கள் கவனத்திற்கு ...

தமிழகக் கல்வி முறையில் ஏற்கனவே பல குளறுபடிகள் ...

இது 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வின் காலம் , பல்வேறு ஏற்றத் தாழ்வுகளடங்கிய கல்வி முறையில் இன்றைய குழந்தைகள் கணக்குப் பாடத் தேர்வு வினாத்தாளை கையில் வாங்கிய உடனே பதறிப் போய் முகம் வெளிறியதைக் காண முடிந்தது.

100 மதிப்பெண் வாங்குவதைத்தான் தடுக்கும் டிவிஸ்டுகள் வழக்கமாக வைத்திருப்பார்கள் , தேர்வுத்துறை வினாத்தாள் தயாரிப்பில் ....


ஆனால் இன்றோ குழந்தை 35 வாங்குவதற்கும் டிவிஸ்ட் ..

தலைமையாசிரியர்கள் கூட்டம் போடும் பள்ளிக்கல்வித் துறை  அதிகாரிகள் ரிசல்ட் குறித்து நிறைய  எதிர்பார்ப்பதும் அதே கட்டளைகளை ஆசிரியர்களிடம் கடத்தும் தலைமை ஆசிரியர்களும் செய்தியாக , பீதியை கிளப்பி விடும் சூழலாக மாறுவதை அறிய மாட்டார்கள்.

குழந்தைகளிடம் இந்த அழுத்தத்தைக் கடத்த முடியாமல் தங்கள் மனதளவில் அழுத்தம் பெற்று இருதலைக் கொள்ளி எறும்புகளாக இருப்பவர்கள் ஆசிரியர்களே. ஏற்கனவே காலம் காலமாக கணக்குப் பாடத்தை வேப்பங்காயாகப்  பார்க்கும்  மனநிலையே அடையாள ப்படுத்தப்பட்டிருக்கும் சமூகத்தில் இன்றைய கணக்குத் தேர்வு அடுத்து வரும் காலங்களில் கணிதப் பிரிவு பாடத்தைத் தேர்வு செய்யும் குழந்தைகளது எண்ணிக்கை வெகுவாகக் குறைய வழி செய்துள்ளது.

அப்படி என்ன நல்ல Educational System தந்துட்டீங்க குழந்தைகளுக்கு? 9 ஆம் வகுப்பு வரை முப்பருவக் கல்வியில் பாதி படித்தும் படிக்காமையும்  வரும் குழந்தைகள் , சரி வழக்கம் போல் ஆசிரியர்களைக் குற்றவாளிகளாகவேக் கூறினாலும் , ஏதோ ஒரு வகையில் அடிப்படை தெரியாமல் வந்த 10ஆம் வகுப்புக் குழந்தைகளை 35 மதிப்பெண் வாங்க வைக்கவே பிரசவ வேதனையை வருடம் முழுக்க அனுபவிக்கும் ஆசிரியர்கள் பாடாய்ப் பட ,

எல்லா கேள்விகளிலும் டிவிஸ்ட் , ஒரு மதிப்பெண் வினாக்களில்  கடினம் ,2 மதிப்பெண் கேள்விக்கான கணக்குகளிலும் கடினம் , 5 மதிப்பெண் பகுதி என எல்லாவற்றிலும் தன் அறிவு மேடை புத்திசாலிக் குழந்தைகளை மட்டும் மனதில் வைத்து கேள்வித் தாள் எடுக்கப்பட்டிருப்பது  கண்டிக்கத்தக்கது.

அப்போ , பின்தங்கிய மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் குழந்தைகள் மகிழ்ச்சியாகவே இருக்கக் கூடாதா ???


ஏன் இவ்வளவு வன்மம் உங்களுக்கு ?
கணக்கு ஆசிரியர்களே மருகிப் போகின்றனர் , ஏன் எங்கள் குழந்தைகளை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றீர் ?

எங்களிடம் படிக்கும் குழந்தைகள் யார் தெரியுமா ? கேள்வியே எதிர்காலத்தில் கேட் கக் கூடாது என்று திட்டமிட்டு , அவர்களது கற்றல் சிறகுகளை ஒடித்து , வெறும் 35க்கும் தயார் செய்யும் குரலற்ற குழந்தைகள். ஏன் படிக்கல ? என்ன படிக்கற ? எந்தக் கணக்குப் புரியல , வா ... நான் உனக்கு சொல்லித் தரேன் என சொல்ல ஆளில்லாத வீடுகளில் வளரும் கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகள்.

அவர்களது நம்பிக்கைச் சிறகுகளையும்  பிய்த்துப்  போட உங்களுக்கு எப்படி மனம் வந்தது ... இதுவும் ஒரு வன் கொடுமை தான்.

மனம் வெதும்புகிறது.

Post Top Ad