Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, October 1, 2026

அரசு ஊழியர்கள் பணியிடத்தில் எவ்வளவு ரொக்கம் வைத்திருக்கலாம்? - விரைவில் தமிழக அரசு முடிவு



பணியின்போது அரசு ஊழியர்கள் ரொக்கமாக எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என உயர் நீதிமன்றதில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்டம் முக்கூடல் சார் பதிவாளர் கலா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், ‘கடந்த 2021-ம் ஆண்டு பணியின்போது கூடுதலாக ரூ.45,000 வைத்திருந்ததாக என் மீது வழக்குப் பதிவு செய்யபட்டது. இதற்காக என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபட்டது. இதை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது எவ்வளவு பணம் ரொக்கமாக வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து அரசு கொள்கை ரீதியான முடிவு எடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, ‘அரசு ஊழியர்கள் பணியின்போது எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பது குறித்து முடிவு செய்வது தொடர்பாக அரசு ஆலோசனை செய்து வருகிறது. முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும்’ எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ‘தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை எத்தனை  சோதனை நடத்தியுள்ளது? இந்த சோதனைகளில் எவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டது? எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது?

அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.


No comments:

Post a Comment

LightBlog