Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, August 26, 2026

SMC தொடர்பான கூட்டங்களை விடுமுறை நாட்களில் நடத்தக் கூடாது - ஆசிரியர்கள் கோரிக்கை

 


பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வுகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அட்டவணைப்படி விடுமுறை நாட்களில் நடத்தாமல் பள்ளி வேலை நாட்களில் நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 


பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புக்கான விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மறு கட்டமைப்பு நிகழ்வுகள் நடத்துவது தொடர்பான அறிவிப்புகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ளார். 


அதில் அனைத்து வகை பள்ளிகளிலும் மறு கட்டமைப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்  29.8.2026 தேதியிலும், 

தொடக்கப் பள்ளிகளில் மறு கட்டமைப்பு நிகழ்வுகள் 12.9.2026 மற்றும் 19.9.2026 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது.


 அது போல் நடுநிலைப் பள்ளிகளில் 26.9.2026 தேதியிலும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 10.10.2026 தேதியிலும் மறு கட்டமைப்பு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த நிகழ்வுகள் 19.9.2026 தவிர மற்ற அனைத்தும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள வேலை திட்ட அட்டவணையில் விடுமுறை நாளாக குறிப்பிடப்பட்டுள்ள சனிக்கிழமைகளில் நடைபெறும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளி வேலை நாள் அட்டவணை வெளியிடப்படுகிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் தங்களது சொந்த பணிகளை மேற்கொள்ள திட்டமிடுகின்றனர். 


குறிப்பாக சனிக்கிழமை நாட்களில் வங்கி, மின்துறை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிடுகின்றனர். சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வெளியூர் பயணங்களையும் திட்டமிட்டு அதற்கான தொடர்வண்டி மற்றும் பேருந்து பயண முன்பதிவு, தங்கும் விடுதி உள்ளிட்ட முன்பதிவுகளையும் செய்து வைத்துள்ளனர். 


இந்த நிலையில் தொடர்ந்து 5 சனிக்கிழமைகள் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு தொடர்பான நிகழ்வுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளிலும் கட்டாயம் இரண்டு சனிக்கிழமைகளில் ஆசிரியர்கள் இப்பணிகளில் ஈடுபட வேண்டி உள்ளது.


 இதனால் ஏற்கனவே திட்டமிட்ட சொந்த பணிகளில் ஈடுபட முடியாத நிலை உள்ளது. எனவே பள்ளிக் கல்வித்துறையின் வேலை திட்ட அறிவிப்பின்படி வழங்கப்பட்ட விடுமுறை நாட்களைத் தவிர்த்து பள்ளி வேலை நாட்களில் இது போன்ற நிகழ்வுகளை வைத்துக் கொள்ள வேண்டும். 


தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வுகளை பள்ளி வேலை நாட்களில் மேற்கொள்ளும் வகையில் தேதி மாற்றம் செய்து அறிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.


ரெ.ஈவேரா, 

பொதுச்செயலாளர்(பொ), 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.


No comments:

Post a Comment

LightBlog