ஆசிரியர்களுக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கு தொடர, தொடக்கக் கல்வித்துறைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து, தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் நரேஷுக்கு, பள்ளிக் கல்வித்துறை செயலர் இன்னசென்ட் திவ்யா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் சிலர், அரசு அனுமதித்த பாடப்பிரிவுகளை தவிர்த்து, வேறு பாடங்களில் உயர் கல்வி பயின்றுள்ளனர். அவர்களுக்கு தவறுதலாக உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட்டது.
இதையறிந்த கல்வித்துறை அலுவலர்கள், அவர்களுக்கு ஊக்க ஊதியத்தை ரத்து செய்து, திருத்திய ஊதிய நிர்ணயம் செய்தனர். அது வரை ஆசிரியர்கள் மிகையாக பெற்ற தொகையை பிடித்தம் செய்து, அரசுக்கு திரும்ப செலுத்தவும் உத்தரவிட்டனர்.
அதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை தொடர்ந்தனர். இவற்றை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர்களான ஆசிரியர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, அரசின் சார்பில் மேல்முறையீடு செய்ய, தொடக்கக் கல்வி இயக்குனர் அனுமதி கோரியிருந்தார்.
அதை பரிசீலித்த தமிழக அரசு, இது சார்ந்த வழக்குகளில், மேல்முறையீடு தாக்கல் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment